ETV Bharat / state

நாமக்கல் பெண் கொலை எதிரொலி:1000-க்கும் அதிகமான பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு

author img

By

Published : Jul 10, 2023, 3:31 PM IST

namakkal
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் தற்போது பொத்தனூர் பகுதியில் சுமார் 1600க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பெண் கொலை எதிரொலி:1000-க்கும் அதிகமான பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை எனக் கூறி வட மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலைக் கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளிப்பேருந்து போன்றவற்றிற்கு தீ வைப்புச் சம்பவங்கள் என அடுக்கடுக்கான வன்முறைச் சம்பவங்கள் இரு மாதங்களாக நடைபெற்று வந்தது.

கடந்த மே மாதம் 13-ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான வெல்ல உற்பத்தி ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள், தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் 4 வட மாநிலத் தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்திலுள்ள அப்பகுதியில் கோவை மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த பதினைந்து தினங்களுக்கு முன்பு, சின்ன மருதூர் பகுதியில் உள்ள பொத்தனூரை சேர்ந்த செளந்தரராஜன் என்பவருக்குச் சொந்தமான, இரண்டு ஏக்கர் நிலத்தில் நடப்பட்டிருந்த பாக்கு தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 1600-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த கோவை மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தி பல இடங்களில் சிசிடிவி கேமராக்களை பல்வேறு பகுதிகளில் பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து, நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் போலீசாருக்கு சவால் விடும் வகையில், பதினைந்து நாட்களுக்கு முன்பு சௌந்தரராஜன் தோட்டத்தில் வெட்டிய பாக்கு தோப்பில் மீதமிருந்த சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பாக்கு மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.

மேலும், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரமேஷ் என்பவரது தோட்டத்திலும் மரவள்ளிக்கிழங்கு குச்சி செடிகளையும் வெட்டி சேதப்படுத்தியதுடன் அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிணறுகளில் உள்ள விவசாய பம்பு செட்டுகளையம் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. ராஜேஸ் கண்ணன் தலைமையிலான போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரச்னைக்குரிய பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் பணியில் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து மர்ம நபர்கள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் நள்ளிரவில் தைரியமாக பாக்கு மரங்கள் மற்றும் விவசாய பம்பு செட்டுகளை உடைத்து சேதப்படுத்தியிருப்பது அப்பகுதி மக்களை மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Tenkasi: ஒரே நேரத்தில் 7 பேரை கடித்த வெறிநாய்; காயமுற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.