ETV Bharat / state

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சாலையில் உணவு.. நாமக்கல் வீடியோவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

author img

By

Published : Jul 5, 2023, 8:14 PM IST

Updated : Jul 5, 2023, 8:39 PM IST

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சாலையில் உணவளிக்கும் அவலம்
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சாலையில் உணவளிக்கும் அவலம்

மாதவிடாய் காலத்தில் சம்பிரதாயம் எனக்கூறி பெண்கள் ஊர் எல்லையில் தனிமைப் படுத்தப்பட்டு, சாலையில் அமர வைத்து உணவளிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்: சமூகத்தில் பெண்களின் மாதவிடாய் பற்றிப் பேச மறந்ததன் விளைவாக, இன்று பெண்களின் தயக்கம், தீட்டு எனக்கூறி பெண் ஒருவரைச் சாலையில் அமர வைத்து உணவு அளிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள போதகாப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெண் யூடியூபர் ஜெகா என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், மாதவிடாயில் தவிக்கும் பெண்கள் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து, ஊர் எல்லையில் இருக்கும் ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுகின்றனர். மேலும் அந்த பெண்களுக்கு உணவுகள் வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்டு தனித்தட்டு, தண்ணீர் குடிக்கத் தனி குவளை எனக் கொடுத்து சாலையில் அமர வைத்து உணவுகள் அளிக்கப்படுகின்றன. இந்த இழிவான செயலை பெருமை என நினைத்து அப்பெண்களும் ஊர்மக்களின் சம்பிரதாயம் என்று கருதி எதிர்ப்பு தெரிவிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த கிராமத்தில் 2007-2008 ம் ஆண்டு பல்நோக்கு திட்டத்தின் கீழ் ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஓய்வு எடுக்கக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி திறந்து வைத்ததாக அங்குள்ள பதிவேடுகள் குறிப்பிடுகின்றன.

பெண்கள் வீட்டிலிருந்தால் தீட்டு என்ற மூடநம்பிக்கையின் காரணமாக அவர்களை வீட்டை விட்டு ஒதுக்கி கிராமத்தின் மையத்தில் உள்ள வீட்டில் அடைத்து வைக்கப்படுவதாகவும், விலங்குகளுக்கு உணவு அளிப்பது போலச் சாலையில் பாக்கு மட்டை தட்டு ஒன்று கொடுத்து அதில் இட்லி மற்றும் கறிக்குழம்பு என உணவு அளிக்கும் இந்த காட்சிகளை அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் பெருமை என நினைத்து ஊரில் பின்பற்றப்படும் அனைத்து காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் அந்த அறையை வீட்டு வெளியே வரக்கூடாது, ஆண்களைப் பார்க்கக் கூடாது, யாரையும் தொடுதல் கூடாது என அடுக்கடுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. எதுவாக இருப்பினும் ஊர் சம்பிரதாயம் எனக்கூறி பெண்களை இதுபோன்று நடத்தப்படுவது வேதனைக்குரிய செயல் எனவும் இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

Last Updated :Jul 5, 2023, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.