ETV Bharat / state

போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

author img

By

Published : Nov 11, 2021, 3:54 PM IST

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

போர்க்கால அடிப்படையில் தரமான சாலைகள் அமைப்பது, விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பது போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நவம்பர் 10 ஆம் தேதி சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ. வேலு கூறுகையில், 'தமிழ்நாட்டில் தொடர்ந்து பருவ மழையால் சேதமடைந்த சாலைகள் முழுவதும் மழைக்குப் பிறகு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும்; தரமான சாலைகள் அமைப்பது, விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பது போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

இந்திய அளவில், தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிக அளவில் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இனிவரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களைப் பெருமளவில் தடுக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

சாலை மேம்பாட்டுத் திட்டம்

'இந்நிலையில், குறை சொல்வதற்கு வேறு காரணங்கள் இல்லாததால் எதிர்க்கட்சியினர், அரசின் நடவடிக்கைகளைக் குறை கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில், சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 250 கி.மீ., சாலைகள் 4 வழிச் சாலையாகவும், 600 கி.மீ., சாலைகள் இரண்டு வழிச் சாலையாகவும் தரம் உயர்த்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்' என்று தெரிவித்தார்.

மண்சரிவைத் தடுக்க நடவடிக்கை

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு

மேலும் 'தமிழ்நாட்டில் உள்ள மலைப் பிரதேசங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, ஐஐடி வல்லுநர்களைக் கொண்டு மண்சரிவைத் தடுப்பது பற்றிய புதிய தொழில்நுட்ப மையங்கள், உதகமண்டலத்தில் 2 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் முடிவுகளைப் பொறுத்து கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலைப் பிரதேசங்களில் மண்சரிவை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மரக்கன்றுகள் நடும் பணி

'சாலை ஓரங்களில் மரம் நடும் திட்டத்தின் கீழ், அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்க மாநில அரசு முடிவு செய்து, இந்த ஆண்டு முதல் கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்லிருந்து திருச்செங்கோடு வரை செல்லும் சாலையில் மரம் நடும் திட்டம் நேற்று நவ. 10 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்,

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடச் சாலைகள் அமைக்க 16 இடங்கள் கண்டறியப்பட்டு அதற்கானப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தச் சாலைகள் அமைக்கத் தேவையான மண் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்மார்ட் சிட்டி முறைகேடு விசாரணையில் தெரிந்துவிடும் - அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.