ETV Bharat / state

கடனை திருப்பி கேட்டு வட்டி கும்பல் டார்ச்சர்;தம்பதியினர் தற்கொலை - இருவர் கைது

author img

By

Published : Aug 25, 2020, 7:41 PM IST

suicide
suicide

நாமக்கல்: திருச்செங்கோட்டில் கடன் தொல்லை காரணமாக தம்பதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செங்கோடு டி.கைலாசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மனைவி மேனகா. விசைத்தறி தொழில் செய்துவரும் இந்த தம்பதிக்கு பூஜாஸ்ரீ (14) என்ற மகளும் நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே, ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவரிடம் மீட்டர் வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார் சுப்பிரமணி.

கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட வேலையின்மையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் வட்டியை கேட்டும் கடன் கொடுத்தவர்கள் சுப்பிரமணியை தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சுப்பிரமணி, கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்குப் போராடிய சுப்பிரமணி மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்ட உறவினர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி, மேனகா இருவரும் உயிரிழந்தனர். பிள்ளைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு நகர காவல் துறையினர் அய்யாசாமி மற்றும் வைரவேல் ஆகியோரை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் (ஆக.23) அய்யாசாமி மற்றும் வைரவேலை கைது செய்த காவல் துறையினர், இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, இன்று (ஆக.25) திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.