ETV Bharat / state

பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

author img

By

Published : Jun 22, 2023, 10:21 PM IST

students hospitalised due to food poison
மாணவ மாணவிகளுக்கு திடீர் வாந்தி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் காலை உணவு அருந்திய 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல்: ராசிபுரம் அடுத்த கொல்லிமலை மலைப்பகுதியில் செங்கரையில் உள்ள, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 380க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதியில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ்" காலை உணவாக 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், எலுமிச்சை சாத உணவு அருந்தியுள்ளனர். விடுதியில் காலை உணவு அருந்திய மாணவ மாணவிகள் பள்ளி வகுப்பறைக்குச் சென்று பாடம் கற்றுக் கொண்டிருந்துள்ளனர், அப்போது அவர்களுக்கு திடீரென மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து பள்ளியில் பணியிலிருந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை, தங்களுடைய இருசக்கர வாகனம் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான கார்கள் மூலம் அருகில் உள்ள பவர்காடு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு, சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின் அங்கிருந்து கூடுதல் சிகிச்சை அளிப்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகள் வார்டில் எலி தொல்லை - நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவலம்!

இந்த நிலையில் பள்ளியில் உணவு அருந்தி, பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் தற்போது பள்ளியில் கொல்லிமலை தாசில்தார் மற்றும் சுகாதாரத் துறையினர், செங்கரை போலீசார் உள்ளிட்டோர் மாணவ மாணவியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், உணவில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் விசாரிக்கும் போது, விடுதியில் தங்களுக்குக் காலை உணவுக்காக அளிக்கப்பட்ட எலுமிச்சை சாதத்தில் துர்நாற்றம் வீசியதாகக் கூறியுள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் தங்களது குழந்தைகளைக் கண்ணீருடன் அனைத்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "பொத்தாம் பொதுவா பேசாதீங்க" அமைச்சர் மா.சுப்பிரமணியன், சின்ராஜ் எம்பிக்கு இடையே காரசார விவாதம்.. நாமக்கல்லில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.