ETV Bharat / state

பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு: மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

author img

By

Published : Dec 2, 2020, 1:39 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் நூதன முறையில் இருசக்கர வாகனத்தைத் திருடிய நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இருசக்கர வாகனம் திருட முயன்ற நபரை கைது செய்த காவல் துறை
இருசக்கர வாகனம் திருட முயன்ற நபரை கைது செய்த காவல் துறை

நாகப்பட்டினம் மயிலாடுதுறை அருகேவுள்ள செருதியூரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் தனது இருசக்கர வாகனத்தை மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு கட்டண கழிப்பிடத்திற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது இரண்டு நபர்கள் அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதைக் கண்டு கூச்சலிட்டுள்ளார்.

உடனே பேருந்து நிலையம் எதிரில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றவர்களை விரட்டிப் பிடித்தனர். பின்னர், வாகனத்திற்கு தவணை கட்டாததால் இதை நாங்கள் எடுத்தோம் என்று கூறியுள்ளனர்.

இதற்கு வாகன உரிமையாளர், தான் சொந்தப் பணத்தில் வாகனம் வாங்கியதாக கூறியுள்ளார். அப்போது, அங்கே வந்த ஒருவர் வாகனத்தை எடுத்துச் சென்றவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதையடுத்து, வாகனத்தை எடுத்தவர்களிடம், பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளனர்.

இதனால், அவர்கள் வாகனத்தைத் திருடிச் சென்றது அம்பலமானது. மேலும், வாகனத்தை எடுத்தவர்களுக்கு ஆதரவாகப் பேசியதும் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்தான் என்பதும் தெரியவந்தது.

அப்போது, சுதாரித்துக்கொண்ட திருடன் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து, மீதமுள்ள நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், மயிலாடுதுறை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இருசக்கர வாகனம் திருட முயன்ற நபரை கைதுசெய்த காவல் துறை

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹஜ்ஜிமுகைதீன் (34) என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய அவரது கூட்டாளி ரகமத்துல்லா, இவர்களுக்கு ஆதரவாகப் பேசிய நபர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்த போலி போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.