ETV Bharat / state

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு - மாணவ, மாணவிகளின் நெகிழ்ச்சி சம்பவம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 12:45 PM IST

மயிலாடுதுறையில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சாந்தி

மயிலாடுதுறையில், நல்லாசிரியர் விருது பெற்று பள்ளிக்கு வந்த ஆசிரியருக்கு மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஸ்ரீ குருஞான சம்பந்தர் தொடக்கப்பள்ளி

மயிலாடுதுறை: தருமபுரத்தில் நல்லாசிரியர் விருது பெற்று பள்ளிக்கு வந்த ஆசிரியருக்கு ரோஜா பூ கொடுத்தும், சந்தன மாலை அணிவித்தும், பேண்ட் வாத்தியங்கள் முழங்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றும் மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞான சம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் சாந்தி என்பவருக்கு தமிழக அரசின் டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான (செப்.5) ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த நாளில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதகிருஷ்ணன் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. இப்பட்டியலில், தமிழக அரசு சார்பில் தேர்வுக் குழு மூலம் 386 சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாடநூல் கழக தலைவர் லியோனி உள்ளிட்டோர் வழங்கினர். இந்நிலையில், நல்லாசிரியர் விருதினை பெற்று பள்ளிக்கு வருகை புரிந்த ஆசிரியருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஆசிரியருக்கு பள்ளி குழந்தைகள் ரோஜா பூ கொடுத்தும், சந்தனமாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து, பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஏராளமான பள்ளி குழந்தைகள் ஊர்வலமாக ஆசிரியரை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு அவருடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து உற்சாக வரவேற்பு அளித்த மாணவர்களுக்கு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சாந்தி இனிப்புகளை வழங்கினார். இதேபோல் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரியின் சீரிய கல்வி சேவையை பாராட்டி தமிழக அரசின் டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இன்று குத்தாலம் பள்ளிக்கு வருகை தந்த தலைமை ஆசிரியருக்கு பள்ளியின் அருகே சாலையின் இரு புறத்திலும் மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று பூங்கொத்து கொடுத்தும், சால்வை வழங்கியும், கைதட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: “தலித் பத்திரிகையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது” - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.