ETV Bharat / state

வீட்டின் கொல்லை புறத்தில் தேனீ வளர்ப்பு.. மாதம் ரூ.40 ஆயிரம் லாபம் பார்க்கும் விவசாயி!

author img

By

Published : Jul 11, 2023, 8:08 PM IST

Etv Bharat
Etv Bharat

ரூ.30,000 முதலீட்டில் வீட்டு கொல்லைப்புறத்தில் நிழல் தரும் மரங்களின் கீழ் பாதுகாப்பாக தேனீ வளர்ப்பை தொடங்கி மாதம் ரூ.40,000-க்கும் மேல் லாபம் ஈட்டும் விவசாயி செல்வகுமாரின் சாதனை குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

தேனீ வளர்ப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் லாபம் பார்க்கும் விவசாயி

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார்(55). 10-ஆம் வகுப்பு வரை படித்த இவர், தனக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் 'விவாசயம்' செய்து வருகிறார். விவசாயத்துடன் வேறு தொழில் ஏதாவது செய்யலாமே என்று யோசனை செய்த செல்வகுமார் 5 வருடங்களாக அடுக்கு தேனீ வளர்ப்பில் அதீத ஆர்வமுடன் சாதித்து வருகிறார். விவசாயத்தில் போதிய லாபம் ஈட்டினாலும், இந்த தேனீ வளர்ப்பு மூலம் லாபம் பெற்று வருகிறார், விவசாயி செல்வகுமார்.

தேனீ வளர்ப்பு குறித்து கோவை சென்று அதற்கான தொழில்நுட்பங்களை கற்றுத் தேர்ந்துள்ளார். வேளாண்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ், 2 தேனீ பெட்டிகளுடன் வீட்டின் கொல்லைப்புறத்தில் 2 அடி உயரத்தில் பிரத்யேக குழாய்கள் அமைத்து எறும்புகள் வராதபடி தேனீ வளர்ப்பை தொடங்கிய இவர், தற்போது, 30 பெட்டிகளில் தேனீ வளர்த்து வருகிறார்.

வருடத்திற்கு 3 தேன் பெட்டிகளில் 75,000 தேனீக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. பின்னர், ஒரு தேன் பெட்டியில் இரண்டரை கிலோ என வருடத்திற்கு 12 கிலோ சுத்தமான தேன் உற்பத்தியாகின்றன. இதனை கிலோ ஒன்றுக்கு ரூ.600 வரை விற்றும், தேனீ வளர்ப்பு பெட்டியை ரூ.300-க்கும் என விற்பனை செய்தும் லாபம் ஈட்டுகிறார்.

தேனீக்களின் ரீங்கார சத்தங்களைக் கேட்டு அவற்றை குழந்தைகளைப் போல வளர்த்து வருகிறார். அவர் வளர்க்கும் இந்த தேனீக்கள் 2 கிமீ வரை சென்று மகரந்தத்தை சேமித்து தேன் கூட்டைக் கட்டி பதனம் செய்து அதில் தூய தேனை சேகரிக்கும். இவ்வாறு ஏற்படும் அயல்மகரந்த சேர்க்கையினால், தென்னை, வாழை, மா, புளியமரம், காய்கனி, பழங்களில் 30 சதவிகிதம் கூடுதல் விளைச்சல் அதிகரிக்கிறது.

இதனால், தங்களின் கிராமம் முழுவதும் மிகவும் செழிப்பாக உள்ளதாகவும் செல்வகுமார் பெருமிதம் கொள்கிறார். தேனீக்களிடம் பழகிவிட்டால், வியர்வை வாசனையை வைத்தே தனது வளர்ப்பாளரை அடையாளம் கண்டுகொள்ளும் என்கிறார், இவர். வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது, குடித்துவிட்டு செல்வது, கருப்பு சட்டை என தேனீக்களிடம் சென்றால் தாக்குதலில் ஈடுபடும் என்றும் தேனீக்கள் பெட்டியின் உள்ளே செல்லும் வாசலை மறைத்து நின்றால் தாக்கும் என்று அறிவுறுத்துகிறார்.

ஆண் தேனீக்கள் ராணி தேனீயை கருவுற செய்தல், ராணீ தேனீக்கள் முட்டையிட்டு குஞ்சுகளை மட்டுமே பொறிக்கும். இதில் வேலைக்காரத் தேனீக்கள் தேன் கூட்டைப் பாதுகாத்தல், தேன் அடைகளை உருவாக்குதல், வெளியில் சென்று மகரந்தத்தை சேகரிப்பது, அடைகளில் பதனம் செய்து தேனை உருவாக்குதல், கூடுகளை பராமரித்தல் உள்ளிட்டவைகளை செய்கிறது.

தேனீக்களின் மணம் மாறுபடுவதால் ஒரு கூட்டில் உள்ள தேன் பூச்சுகள் மற்றொரு கூட்டிற்கு செல்வதில்லை. தேன் பெட்டியில் தேனீக்களை எப்படி கையாளுவது உள்ளிட்டவைகளை இலவசமாக கற்றுத்தரும் விவசாயி செல்வகுமார், தேனீ வளர்ப்பு குறித்து இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார். திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்பட பல மாவட்டங்களில் இருந்து தேன் தேவைக்காகவும், தேனீ வளர்ப்பு குறித்தும் பலரும் இலவசமாக பயிற்சி பெற்று செல்கின்றனர்.

தேன், தேன்மெழுகு, தேன் பூச்சிகளை விற்பனை செய்தல் போன்றவற்றால் மாதம் 40 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுவதாகவும் இதற்காக வாரத்தில் ஒருநாள் செலவழிப்பதாக அவர் கூறுகிறார். உலகில் தேனீக்கள் இல்லாவிட்டால், 4 ஆண்டுகளில் மனித இனமே அழிந்துவிடும் என்றும் தேனீக்களிடம் நண்பரைப் போல் பழகிவிட்டால் அவை எப்போதுமே கொட்டாது என்று சொல்லும் செல்வகுமார், அனைத்து விவசாயிகளுக்கும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு விவசாயத்தில் கூடுதல் லாபம் ஈட்டலாம் என்று சக விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை.. மனு அளிக்க வருவோரின் துயரம் தீருமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.