ETV Bharat / state

'லியோ' படத்தின் டிக்கெட் கூடுதல் விலையில் விற்கப்படுகிறதா? - மயிலாடுதுறையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 10:52 PM IST

லியோ படம் திரையிடப்படும் திரையரங்கில் அதிகாரிகள் சோதனை
லியோ படம் திரையிடப்படும் திரையரங்கில் அதிகாரிகள் சோதனை

Leo movie ticket price: 'லியோ' படம் வெளியான திரையரங்கில், அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுகிறதா என்பது குறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.

லியோ படம் திரையிடப்படும் திரையரங்கில் அதிகாரிகள் சோதனை

மயிலாடுதுறை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் இன்று (அக்.19) உலகமெங்கும் வெளியாகி, பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வரும் படம் 'லியோ'. முன்னதாக இப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப் படக்குழு அனுமதி கோரியதை அடுத்து, காலை 9 மணிக்குச் சிறப்புக் காட்சி திரையிட அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் 'லியோ' படத்திற்கான சிறப்புக் காட்சி திரையிடுவது குறித்து பல்வேறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தரப்பில் 'லியோ' படத்தின் சிறப்புக் காட்சிகள் 19 முதல் 24 ஆம் தேதி வரை மட்டும், நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும் என்றும், முறையான போக்குவரத்து மற்றும் பார்கிங் வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் விதிமீறல்கள் ஏதேனும் கண்டால் புகார் அளிக்கத் தொலைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள பிரதான திரையரங்குகளான விஜயா மற்றும் ரத்னா ஆகிய இரண்டு திரையரங்குகளிலும் 'லியோ' படம் திரையிடப்பட்டது. அந்த வகையில் ரத்னா திரையரங்கில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆராவாரத்துடன் படம் பார்க்கச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, முதல் காட்சி முடிந்து 2வது காட்சி தொடங்கவிருந்த சமயத்தில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா மற்றும் வட்டாட்சியர் சபீதாதேவி ஆகியோர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டிக்கெட் கவுண்டரில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளின் விலை ஆகியவற்றை விசாரித்தனர்.

பின்னர் படம் பார்க்க வந்த மக்களிடம், தாங்கள் வாங்கிய டிக்கெட் விலை குறித்து விசாரித்தனர். அதன்படி அத்திரையரங்கில் முதல் வகுப்பு டிக்கெட்டுகள் 250 ரூபாய்க்கும், இரண்டாம் வகுப்பு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து திரையரங்கு உள்ளே சோதனை செய்த அதிகாரிகள் திரையரங்க வளாகத்தைச் சுத்தமாக வைக்கும் படியும், ஒவ்வோரு காட்சிகளுக்கு இடையில் திரையரங்கின் உள்ளே சுத்தம் செய்யவும் அறிவுறுத்தினர்.

பின்னர் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு வசதிகளைக் குறித்து விசாரணை மேற்கொண்டு, கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். இந்நிலையில் படம் திரையிடப்படும் சமயத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவத்தால் மயிலாடுதுறை ரத்னா திரையரங்க வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: விஜய் நடித்துள்ள லியோ படம்‌ எப்படி இருக்கு? - ரசிகர்கள் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.