ETV Bharat / state

குப்பையை சாலையில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலை மறியல்

author img

By

Published : Mar 13, 2021, 8:18 AM IST

public road blockade
குப்பையை சாலையில் கொட்டுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல் நகராட்சி ஊழியர்கள் தருமபுரம் சாலை சுடுகாடு செல்லும் பாதையில் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவ்வாறு சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்க 7 இடங்களில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குப்பைகளை மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் சமீப காலமாக வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, குப்பை கிடங்குக்கு எடுத்துச் செல்லாமல் தருமபுரம் சாலையில் உள்ள சுடுகாடு பகுதி புதுத்தெரு அருகே உள்ள ரயில்வே லைன், கிட்டப்பா பாலம் சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருவதாகவும், அந்தந்தப் பகுதியில் தேங்கும் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தருமபுரம் சாலை சுடுகாட்டுப் பாதையில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். குப்பைகள் கொட்டும் இடத்துக்கு அருகே 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இப்பகுதியில் நகராட்சி துறையினர் குப்பைகளை கொட்டி தீயிட்டு கொளுத்தி விடுவதால் சுவாசக் கோளாறு மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு வருவதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

குப்பையை சாலையில் கொட்டி சென்றுள்ள நகராட்சி நிர்வாகம்

இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரம் சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் குப்பைகள் சம்பந்தப்பட்ட பகுதியில் கொட்டப்படுவதையும், எரிக்கப்படுவதையும் கண்டித்து முழக்கமிட்டனர்.

குப்பையை சாலையில் கொடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

மேலும், குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல் சுகாதார சீர்கேட்டை நகராட்சித் துறையினரே ஏற்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சாலை மறியல் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி துறை அலுவர்கள், காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து குப்பைகள் இனி இந்தப் பகுதியில் கொட்டப்படாது எனத் தெரிவிக்கப்பட்டு, அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கையை நகராட்சி மேற்கொண்ட நிலையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: ’மீண்டும் அவரே வேண்டும்...’; ஆதரவாளர்கள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.