ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சிக்கு அனுமதி அளிக்கக்கூடாது.. பேராசிரியர் த.ஜெயராமன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 2:23 PM IST

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
பேராசிரியர் த.ஜெயராமன்

ONGC: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சிக்கு அனுமதி அளிக்கக்கூடாது

நாகப்பட்டினம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி அளித்துள்ள விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கடந்த 2020ஆம் ஆண்டு காவிரிப்படுகை மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோ கார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது.

மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய, ஹெல்ப் (Hydrocarbon Exploration and Licensing Policy – HELP) அடிப்படையில், மூன்றாவது சுற்று திறந்த வெளி ஏலம் (OALP) மூலம் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர கிலோ மீட்டர் பகுதியில் (இதில் தரைப்பகுதி – 1259.44 மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் 143.97 ச.கிமீ.) ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. தற்போது அந்தப் பகுதியில் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம் உள்ளிட்ட 20 இடங்களில் புதிதாக ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க, சுற்றுசூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அக்டோபர் 2023 அன்று விண்ணப்பித்துள்ளது.

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கு அளித்துள்ள விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, “ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும். எண்ணெய் எரிவாயு கிணறுகளால் காவிரிப்படுகை, பாதிப்புக்கு உள்ளானதன் காரணமாகவே காவிரிப்படுகை பாதுகாப்பு மேம்பாட்டுச் சட்டம் 2020 இயற்றப்பட்டது.

தற்போது, இந்த அனுமதி வழங்கப்பட்டால் ராமநாதபுரத்திலும் அதே பாதிப்பு ஏற்படும். அரியலூரில் 10 கிணறுகள், கடலூரில் 5 கிணறுகள் அமைக்க ஏற்கனவே ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்திருந்ததை, தமிழக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நிராகரித்ததை போன்று இந்த விண்ணப்பத்தையும் நிராகரிக்க வேண்டும்.

பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் குழு கடந்த ஆண்டு தனது ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில் எண்ணெய் எரிவாயு திட்டங்களால் நிலமும், நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுகளைக் கையாண்ட முறையில் தவறு இருந்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது.

இந்நிலையில், பொதுமக்களிடையே ஹைட்ரோ கார்பன் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 15ஆம் தேதி முதல் ராமநாதபுரம், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இரண்டு மாதங்களுக்கு தொடர் மக்கள் சந்திப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் 9.93 சதவீத வாக்குகள் பதிவானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.