ETV Bharat / state

’ராஜினாமா தொகை, நிவாரணத்துக்குச் செல்லட்டும்’ - உடற்கல்வி ஆசிரியரின் செயலுக்குப் பாராட்டு

author img

By

Published : Jun 3, 2021, 11:54 AM IST

Updated : Jun 3, 2021, 2:18 PM IST

உடற்கல்வி ஆசிரியரின் செயலுக்கு பாராட்டு
உடற்கல்வி ஆசிரியரின் செயலுக்கு பாராட்டு

நாகப்பட்டினம்: தனது அரசுப் பணியை விடுத்து, அதிலிருந்து கிடைக்கும் பிடித்தத் தொகையை கரோனா பேரிடருக்காக முதலமைச்சரின் நிவாரணத் தொகைப் பிரிவுக்குச் செலுத்த முன்வந்த உடற்கல்வி ஆசிரியரின் செயல் பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகை அடுத்துள்ள தெத்தி சமரசம் நகரில் வசித்துவருபவர் புத்த நேசன். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் கரோனாவால் மக்கள் உயிரிழந்து வருவதைக் கண்டு புத்தநேசன் வருந்தியுள்ளார்.

அதனால் தனது அரசுப் பணியை ராஜினாமா செய்து, அதில் வரும் பிடித்தத் தொகைகளை, கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், கல்வித் துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவரது செயலுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் புத்தநேசன் பேசுகையில், “மக்கள் படும் இன்னல்களைக் கண்டு, அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக எங்களது சார்பிலும் ஏதேனும் செய்ய வேண்டும் எனத் தோன்றியது.

செய்தியாளர்களிடம் பேசிய உடற்கல்வி ஆசிரியர் புத்தநேசன்.

இது குறித்து எனது மனைவி கோமதி, மகள் சுவாதியா ஆகியோரின் சம்மதத்தோடும் இந்த முடிவை எடுத்துள்ளேன். அரசு எனது ராஜினாமா கடிதத்தை ஏற்று, பிடித்தத் தொகையை கரோனா நிவாரண நிதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இன்றளவும் பலருக்கும் அரசு வேலை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி உதவி அளிக்க, தனது வேலையையே உதறித் தள்ள முன்வந்துள்ள உடற்கல்வி ஆசிரியரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: 'அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள்?' - மூடநம்பிக்கைகளைத் தகர்த்த பகுத்தறிவு பாதுகாவலன்

Last Updated :Jun 3, 2021, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.