ETV Bharat / state

மயிலாடுதுறை சயனைடு விவகாரம்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

author img

By

Published : Jun 14, 2023, 12:28 PM IST

Etv Bharat
Etv Bharat

டாஸ்மாக் மதுபானம் அருந்தியதால் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் மதுவில் சயனைடு விஷம் கலந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தவறான தகவல் பதிவிடுவதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறையில் இருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் போராட்டம்

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட தத்தங்குடி கிராமத்தில் பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இரண்டு பேர் அரசு டாஸ்மாக் மதுபானம் அருந்தி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், நேற்று உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் கொண்டு செல்லப்பட்டது.

அதேநேரம், பழனி குருநாதன் மற்றும் பூராசாமி ஆகியோர் இறந்து கிடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை தடய அறிவியல் மருத்துவ நிபுணர் குழு சோதனை செய்தது. இதில் மது பாட்டிலில் சயனைடு கலக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார். ஏற்கனவே, சந்தேக மரணம் என்று காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் தவறான தகவலை பதிவிடுவதாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி மங்கைநல்லூர் பகுதியில் இறந்த பழனி குருநாதன் வீட்டின் அருகே உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பொய்யான செய்தியை பரப்புவதாக முழக்கமிட்டனர். இதனால் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ் குமார் தலைமையில் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையே, முன்னதாக டாஸ்மாக் மதுபானத்தால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமாரமங்கலம் கழனிவாசல் பகுதியில் மதுபானம் வாங்கிய டாஸ்மாக் கடையில் இருந்த 400 மது பாட்டில்களை பெரம்பூர் காவல் துறையினர் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அங்கிருந்த 13 பாட்டில்களை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து மதுபான கடை மேற்பார்வையாளர் ரமேஷிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இரண்டு டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ளன.

தற்போது மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, விசாரணை அலுவலர் மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தனது சொந்த நிதியில் இருவரது குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிரேத பரிசோதனை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில், போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பழனி குருநாதனின் அண்ணன்கள் மனோகர் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவர் உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் மயிலாடுதுறை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "டாஸ்மாக் மதுவில் சயனைடு" - மயிலாடுதுறையில் இருவர் மரணத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.