ETV Bharat / state

'நபார்டு வங்கியில் விவசாயிகள் எப்படிப் பயன்பெறலாம்?'

author img

By

Published : Sep 11, 2020, 10:08 PM IST

நபார்டு வங்கியில் விவசாயிகள் எப்படி பயன்பெறலாம்?
நபார்டு வங்கியில் விவசாயிகள் எப்படி பயன்பெறலாம்?

நபார்டு வங்கியில் விவசாயிகள் எப்படிப் பயன்பெறலாம் என்பது குறித்து விளக்குகிறார் நாகப்பட்டினம் மாவட்ட நபார்டு வங்கி( NABARD - National Bank For Agriculture And Rural Development) திட்ட மேலாளர் பிரபாகர்.

''இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்" என்பார், நம் தேசத் தந்தை காந்தி. அந்த கிராமங்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதே மத்திய அரசின் நபார்டு வங்கி. ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமங்களின் வளர்ச்சியையும் சேர்த்தே கணக்கில் கொள்ளப்படும். அதனை கருத்தில் கொண்டு, இந்திய அரசு, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development) என்கிற NABARD வங்கியை 1983ஆம் ஆண்டு உருவாக்கியது. இது மும்பையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் வளர்ச்சிக்கான வங்கியாகும். 1982ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் சிறப்புச் சட்டம் ஒன்றின் மூலம் இந்தியக் கிராமங்களில் கடன் வழங்கலை உயர்த்தி, விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களையும் வளர்க்கும் நோக்கத்துடன் இந்த வங்கி நிறுவப்பட்டது. நபார்டு வங்கிக்கு இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை, திட்டமிடல், வங்கிகளை கண்காணித்தல் மற்றும் செயலாக்கம் தொடர்பான செயல்பாடுகளில் முழுப்பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பான்மையான மக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வின்றி உள்ளனர்.

இதற்கு விடைகாணும் பொருட்டு நபார்டு வங்கியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட நபார்டு வங்கித் திட்ட மேலாளர் பிரபாகரிடம் 'ஈடிவி பாரத் தமிழ்நாடு' ஊடக செய்தியாளர் ஜெகநாதன் கலந்துரையாடினார். அந்த உரையாடல் பின்வருமாறு:

  • வணிக வங்கிகளுக்கும் நபார்டு வங்கிகளுக்கும் உள்ள வேறுபாடு?

'நபார்டு வங்கி' என்பது வணிக வங்கி போன்று அல்லாது வங்கிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வங்கியாகும். வங்கிகளுக்கான விவசாயம், கிராமப்புற வளர்ச்சிக்கு வழங்கப்படும் கடன்களுக்கான நிதியை, நபார்டு வங்கி அளித்து வருகிறது. மாநில அரசின் கிராமப்புற உள்கட்டமைப்புகளான சாலைகள், பாலங்கள், கால்நடை மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றிற்கு நிதிக் கடன் வழங்குகிறது. கூட்டுறவு வங்கிகளை கண்காணித்தல் போன்ற அடிப்படை பணிகளையும் நபார்டு வங்கி மேற்கொள்கிறது. மேலும், மேம்பாட்டுத் திட்டங்கள் இலவச நிதி மூலம் தொண்டு நிறுவனங்கள், விவசாயக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல், வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் அளித்தல் போன்றவற்றைகளையும் நபார்டு வங்கி மேற்கொண்டு வருகிறது.

  • விவசாயிகள் நபார்டு வங்கியின் நிதி பெற எவ்வாறு முயற்சி செய்ய வேண்டும்?

விவசாயம், கிராமப்புற மேம்பாடு போன்றவற்றுக்கு வங்கிகள் கடன் உதவி அளித்து வரும் நிலையில், வங்கிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் நபார்டு வங்கி நிதி உதவி அளித்து வருகிறது. விவசாயிகள் நேரடியாக நபார்டு வங்கி நிதியைப் பெற முடியாது. வணிக வங்கிகள் மூலமே கடன் பெற முடியும்.

  • விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் வழங்கும் கடன் திட்டங்கள் என்ன?

ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் தர வேண்டும் என்பதற்காக, காலாண்டுக்கு ஒருமுறை அனைத்து வங்கிகளையும் மதிப்பாய்வு செய்து, அதற்கான திட்டமிடல் செய்யப்பட்டு, வங்கிகள் அதனை செயல் முறைப்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்கும் பணியை நபார்டு வங்கி செய்து வருகிறது. மானியத்துடன் கடன் உதவி வழங்கும் 4 திட்டங்களை நபார்டு வங்கி நடைமுறைப்படுத்துகிறது.

தற்போது சில காரணங்களால் தேசிய கால்நடைத் திட்டம், வேளாண் வணிக உள்கட்டமைப்புத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்கள் மட்டுமே மானியத்துடன் அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய கால்நடைத் திட்டத்தில் ஆடு, கோழி, பன்றி, முயல் வளர்ப்பு இந்த நான்கு திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் வணிக கட்டமைப்புத் திட்டத்தில் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், விவசாய விளை பொருட்களை தரம் பிரித்தல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்குவது, சிறிய அளவிலான ஆயில் மில், ரைஸ் மில் உள்ளிட்டவைகளுக்கு வங்கிகளில் பெறும் கடனுக்கு, நபார்டு வங்கி மானியம் வழங்கி வருகிறது.

பிரபாகர், நாகப்பட்டினம் மாவட்ட நபார்டு வங்கி திட்ட மேலாளரின் பிரத்யேகப் பேட்டி
  • விவசாயிகள் நபார்டு மூலம் கடன் பெற்று உற்பத்தி செய்யும் வேளாண்பொருட்களை கொள்முதல், சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க, நபார்டு வங்கியில் ஏதேனும் திட்டம் உள்ளதா?

நபார்டு வங்கி நிதி உதவி வங்கியாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. வேளாண் உற்பத்திப்பொருட்களை கொள்முதல் செய்யவும் சந்தைப்படுத்தவும் எந்த ஒரு செயல்பாடும் மேற்கொள்வதில்லை. அவற்றை நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்றவை மேற்கொள்ளும்.

  • நபார்டு வங்கித் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு செல்லும் முறை? நபார்டு வங்கியின் திட்டங்கள் குறித்தும் மானியங்கள் குறித்தும் மகளிர் சுய உதவிக் குழு கூட்டங்கள், தொண்டு நிறுவனங்கள், வேளாண் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூலம் விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. மேலும் விவசாயம் சார்ந்த கடன் திட்ட விவரங்களை அறிய விரும்பினால் நேரடியாக வந்து விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
  • கரோனா கால சிறப்பு நிதி திட்டங்கள் என்ன?

கரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் விதமாக, மத்திய அரசு அறிவித்துள்ள 'ஆத்ம நிர்பார் பாரத்' திட்டத்தின்கீழ், விவசாய உள்கட்டமைப்பு, கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு, மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு ஆகிய மூன்று திட்டங்களுக்கு 3% வட்டி மானியத்துடன் எந்த ஒரு பிணையமும் இன்றி 2 கோடி வரை கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனா காலத்தில் உயிர்மூச்சுக்காக 4 மாதங்களில் அரசு செலவழித்த தொகை ரூ. 30 கோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.