ETV Bharat / state

திருக்கடையூர் கோயில் குடமுழுக்கு விழா - லட்சக்கணக்காணோர் சாமி தரிசனம்

author img

By

Published : Mar 27, 2022, 2:04 PM IST

திருக்கடையூர் கோயில் குடமுழுக்கு விழா
திருக்கடையூர் கோயில் குடமுழுக்கு விழா

தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸவரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் 1,400 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்து மார்க்கண்டேயனுக்கு என்றும் சிரஞ்சீவி என்ற வரம் அளித்த தலம்.

அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் 60 வயதில் சஷ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரதசாந்தி, 80இல் சதாபிஷேகம் மற்றும் 90இல் மகா அபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் கனகாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

வருடத்தின் 365 நாட்களும் திருமணங்களும், யாகங்களும் நடைபெறும் ஒரே ஸ்தலமாகும். ஆகையால் இக்கோவிலுக்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில், கடந்த 1997ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சீரிய முயற்சியால் 2020 ஆகஸ்ட் 21 அன்று பாலாலையம் செய்யப்பட்டு குடமுழுக்குக்கான திருப்பணி வேலைகள் நடைபெற்று முடிந்தது.

லட்சக்கணக்காணோர் பங்கேற்பு: இதைத் தொடர்ந்து, மார்ச் 23ஆம் தேதி கோவிலின் உள்ளே 72 யாக குண்டங்கள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்நிலையில், 120 வேத விற்பன்னர்கள் யாகங்கள் நடத்தி, 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், தேவாரம், திருப்பதிகம் பாடி 8 கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை செய்விக்கப்பட்டு, யாகசாலைகளிலிருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் கடங்கள் புறப்பாடு ஆகி, வேத மந்திரங்கள் ஓத அந்தந்த விமான கோபுரத்தை அடைந்து ஸ்ரீ அபிராமி அம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கும், ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி, விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக இன்று (மார்ச் 27) நடைபெற்றது.

தஞ்சை சரக டிஐஜி கயல்விழி மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்ட கண்காணிப்பாளர்கள், காவல்துறை அடங்கிய போலீசார் 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேக விழாவில் அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே கோயில் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கரோனா வழிகாட்டு விதிமுறைகளால் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் 12 மணிக்கு பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி சுகாதாரத் துறை மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.