ETV Bharat / state

குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 10:47 AM IST

kuththalam-karthika-kadainayiru-tirthavari-festival
குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடைஞாயிறுவிழா

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரிதீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடைஞாயிறுவிழா

மயிலாடுதுறை: வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனைப்போல ஓளி படைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் பூமிக்கு ஓளி வழங்க முடியாமல்போனது. இதனையடுத்து சூரியபகவான் தான் இழந்த சக்தியையும், சிவபெருமான் அருளை பெறவும் குத்தாலத்தில் உள்ள காவிரியில் புனிதநீராடி தவமிருந்து அரக்கனிடமிருந்து துன்பம் நீங்கப்பெற்ற நாள் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பது ஐதீகம்.

அதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத கடைஞாயிறு அன்று சிவ, வைணவ தலங்களிலிருந்து
பஞ்சமூர்த்திகள் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் தீர்த்தவாரி உற்சவம் குத்தாலம் காவிரிதீர்த்த படித்துறையில் நடைபெறுவது வழக்கம்.

இதன் சிகர நிகழ்வான கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையான நேற்று(டிச.10) ஸ்ரீ அரும்பனவனமுல்லை நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர், ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ ஓம்காளீஸ்வரர், ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சோழீஸ்வரர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகிய ஆலயங்களில் இருந்து சாமி மற்றும் அம்பாள் மங்கள வாதியங்கள் ஒலிக்க வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மயில்வாகனம், மூஷிக வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் சிவவாத்தியங்கள் ஒலிக்க வீதி உலாவாக காவிரி கரையில் எழுந்தருளினர்.

அங்கு அஸ்திரதேவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.