ETV Bharat / state

’அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுதசுரபி’ - மருத்துவர் ராமதாஸ் பரப்புரை

author img

By

Published : Mar 21, 2021, 11:05 AM IST

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

மயிலாடுதுறை: பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதை திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுத சுரபி எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தன் பரப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் பாமக வேட்பாளர் பழனிசாமியை ஆதரித்து சின்னக்கடைவீதியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

”மயிலாடுதுறை நகரில் பலமுறை தேர்தல் பரப்புரைக்கு வந்திருக்கிறேன். தனி மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, அதனை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி கொடுத்த பின்பு, தற்போது வந்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த மண்ணில் கால்பதித்து இறங்கிப் பேச முடியாத நிலையில் நான் இருப்பது வேதனையாக இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் சேரும்போது 10 அம்சக் கோரிக்கைகளை வைத்தோம். அதில் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வேண்டும், மயிலாடுதுறையை தனிமாவட்டமாக வேண்டுமென்பது உள்பட 10 கோரிக்கைளை வைத்தோம்.

விவசாயிகளின் நலன்மீது அக்கறைகொண்ட கட்சிகள் பாமக, அதிமுக. அதனால்தான் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு ஒப்புதல் கொடுத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். திமுகவிற்கு நீங்கள் ஓட்டுபோட்டு திமுக ஆட்சிக்குவந்தால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகும், அது தமிழ்நாட்டிற்கு இருண்டகாலமாக மாறிவிடும்.

ஸ்டாலின் செய்வது கார்ப்பரேட் அரசியல். சொந்தமான முடிவுகளை எடுக்க முடியாமல், வெளிமாநில நபரை நியமித்து திமுக தேர்தலை சந்திக்கிறது. பாமக தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதை வாடிக்கையாக திமுக வைத்திருந்தாலும், அதனை ஒழுங்காக காப்பி அடிப்பதில்லை. அதிமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி. சிறுபான்மையின மக்கள், கிறிஸ்தவ மக்களுக்காக பாமக தேர்தல் அறிக்கையில் பல விஷயங்கள் கூறியுள்ளோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பரப்புரை

தமிழ்நாட்டில் 370 சமுதாய மக்கள் இருக்கின்றனர். வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு பெற்றதுபோல், ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் தனித்தனியாக உள்ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்கு நான் தொடர்ந்து பாடுபடுவேன்” எனப் பேசினார்.

இதையும் படிங்க:’ஸ்டாலின்தான் வராரு... மக்களெல்லாம் உஷாரு’: பாட்டாகவே பாடிய விந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.