ETV Bharat / state

பிண்டம் கரைக்கவும் தண்ணீர் இல்லை.. காவிரிக் கரையில் தவித்த மக்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 1:07 PM IST

மகாளய அமாவாசை: பிண்டங்களை கரைக்க காவிரியில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
மகாளய அமாவாசை: பிண்டங்களை கரைக்க காவிரியில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

Mahalaya Amavasya: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திற்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள், பிண்டங்களை கரைக்கத் தண்ணீர் இல்லாமல் மண் தரையிலேயே போட்டுவிட்டு திரும்பினர்.

பிண்டம் கரைக்கவும் தண்ணீர் இல்லை.. காவிரிக் கரையில் தவித்த மக்கள்

நாகப்பட்டினம்: காவிரியில் தண்ணீர் இல்லாததால் மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுப்பதற்காக பூம்புகார் காவிரி சங்கமம் மற்றும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திற்கு வந்த மக்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும், தண்ணீர் இல்லாததால் தர்ப்பணம் கொடுத்த மக்கள் பிண்டங்களை தண்ணீரில் கரைக்க முடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

மகாளய அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்வது வழக்கம். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய இந்த மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்காதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் என கூறப்படுகிறது.

மகாளய அமாவாசையான இன்று தர்ப்பணம் அளிப்பதன் மூலம் குடும்பத்தில் மறைந்த ஏழு தலைமுறைகளுக்கு தர்ப்பணம் வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது. இதற்காக புண்ணிய நதிகள், குளங்கள், கடற்கரைகள் ஆகிய பகுதிகளில் மக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பலிகர்ம பூஜைகள் செய்வது வழக்கம்.

பூம்புகார் காவிரி: அதன்படி, இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புகழ் பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் காவிரி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலையிலிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் இந்த ஆண்டு குறைந்த அளவிலான மக்களே வந்துள்ளனர். காவிரி சங்கத்தில் பிண்டங்களை கரைத்து கடலில் புனித நீராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மகாளய அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் திரண்ட மக்கள்.. சிறப்புகள் என்ன?

காவிரி துலா கட்டம்: மயிலாடுதுறை நகரின் நடுவே உள்ள காவிரி துலா கட்டம் காசிக்கு நிகராக திகழ்கிறது. உலகப் புகழ் பெற்ற இந்த மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும், கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்களது பாவங்களைப் போக்கி புனிதமடைந்ததாக வரலாற்றில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆற்றின் நடுவே 16 தீர்த்தக் கிணறுகள் உள்ளதாகவும், இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதற்காக மயிலாடுதுறை மட்டுமின்றி, பல்வேறு ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து தர்ப்பணம் கொடுத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வராததால், காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை காலையில் இருந்து குறைந்த அளவே உள்ளது. மேலும், வீடுகளிலேயே குளித்துவிட்டு காவிரி கரைக்கு வந்த பொதுமக்கள், காவிரியில் தண்ணீர் இல்லாததால் பூஜைகள் செய்த பிண்டங்களை கரைக்க முடியாமல் திணறினர்.

மேலும், ஆற்றிலுள்ள 16 கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் தர்ப்பணம் கொடுத்த மக்கள் மண் தரையில் பிண்டங்களை போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். 2017 ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் நடைபெற்ற புஷ்கரத்தை முன்னிட்டு புஷ்கர தொட்டி கட்டப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போர்வெல் மூலம் அதில் தண்ணீர் நிரப்பியிருந்தால் பக்தர்கள் ஏமாற்றம் இன்றி வழிபாடு செய்திருப்பார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகாளய அமாவாசை; தஞ்சை திருவையாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.