ETV Bharat / state

கழுமலையாறு பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி: பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெளிநடப்பு

author img

By

Published : Jul 12, 2023, 4:13 PM IST

கழுமலையாறு பாசன வாய்க்காலைத் தூர்வாரும் பணி குறித்து விவசாயிகள் குடியிருப்புவாசிகள் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

கழுமலையாறு பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி: வட்டாட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெளிநடப்பு

மயிலாடுதுறை: சீர்காழி நகரின் வழியே பிரதான பாசன வாய்க்காலான கழுமலையாறு வாய்க்கால் செல்கிறது. கொண்டல் பகுதியில் பிரியும் கழுமலையாறு வாய்க்கால் அகணி, கோயில்பத்து, சீர்காழி, தாடாளன் கோயில், திட்டை, தில்லைவிடங்கன், சிவனார்விளாகம், திருத்தோணிபுரம், செம்மாங்குடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

மேலும் சீர்காழி நகர் பகுதியின் பிரதான மழை நீர் வடிகாலாகவும் கழுமலையாறு வாய்க்கால் உள்ளது. இந்நிலையில் வாய்க்கால் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. வாய்க்காலின் மேற்கு பகுதி முழுமையாக தூர்வாரப்பட்ட நிலையில், வாய்க்காலின் கிழக்குப் பகுதி தூர்வாரும் பணி தொடங்கியது.

இடைப்பட்ட சீர்காழி நகர் பகுதியில் வாய்க்காலைத் தூர்வார முடியாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். நகர் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாததாலும், கழிவுநீர் வாய்க்காலில் கலப்பதைத் தடுக்க முடியாமலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

நகர் பகுதி வணிக வளாகங்கள், நகர்ப்புற குடியிருப்பு வளாக கழிவுநீர், தனியார் திருமண மண்டப கழிவுநீர் மழைநீர் வடிகால் வழியே கழுமலையார் வாய்க்காலில் விடப்படுகிறது. அதனை தடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தனிநபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் விவசாயிகளையும் தடுத்து வாக்குவாதம் செய்கின்றனர்.

இதனால் நகர் பகுதியைத் தூர்வார முடியாமல் கிழக்கு பகுதியை தூர்வார துவங்கிய நிலையில், இதனால் எந்த பயனும் இல்லை; எனவே தூர்வார வேண்டாம் என விவசாயிகளே தடுத்து நிறுத்தினர். கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருவதாகவும் குற்றம்சாட்டும் விவசாயிகள் நகர் பகுதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: ரயில் நிற்பதற்குள் ஏறிய பயணி கீழே விழுந்த சிசிடிவி காட்சி..பதைபதைக்கும் வீடியோ!

இதனால் குடியிருப்புவாசிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை சீர்காழி வட்டாட்சியர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் கழிவுநீர் கலப்பதால் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் வருதில்லை எனவும், பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதால் கழிவு நீர் கழுமலை ஆற்றில் கலப்பதை, சீர்காழி நகராட்சி தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து விவசாயிகள் பாதியில் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வீட்டின் கொல்லை புறத்தில் தேனீ வளர்ப்பு.. மாதம் ரூ.40 ஆயிரம் லாபம் பார்க்கும் விவசாயி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.