மயிலாடுதுறை: தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில், ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தீபாவளி அருளாசி வழங்கியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, “நரகாசுரன் என்ற அசுரன் என்றைக்கும் சாகா வரமும், 1008 அண்டங்களையும் 108 யுகங்கள் ஆட்சி செய்ய வேண்டி சிவபெருமானிடம் வரம் கேட்டான். கேட்டவர்க்கு கேட்ட வரம் அருளும் இறைவனும் நரகாசுரனுக்கு அந்த வரத்தினை வழங்கினார்.
ஆனால், யாரொருவர் பிறக்கின்றாரோ அவருக்கு இறப்பும் உண்டு. எந்த வழியெல்லாம் தான் அழியக்கூடாது என்று நரகாசுரன் வரம் கேட்டானோ, அதற்கு மாற்றாக ஒரு வழியை கண்டுபிடித்த சிவபெருமான், இன்றைய நாளில் தேவர்கள் மற்றும் அனைத்து உயிர்களின் விண்ணப்பத்தினையும் ஏற்று, திருமாலிடம் சொல்லி நரகாசுரனை வதம் செய்ய வைக்கிறார்.
அப்போது நரகாசுரன் தான் இறந்த நாளில் இதுவரை துன்பப்பட்டுக் கொண்டிருந்த அனைவரும் இன்பமாக இருக்க வேண்டும் என்றும், அன்றைய நாளில் அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, வெடி வெடித்து மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும் என்று அவன் கேட்கிறான்.
அவ்வகையில்தான் ஐப்பசி மாத சதுர்த்தசி திதியில் விடியற்காலை பொழுதில் அனைவரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். எண்ணெய் இல் லெட்சுமி வாசம் செய்கிறார். வெந்நீரிலே அன்றைய தினம் கங்காதேவி ஆவாகனம் செய்திருக்கிறார்.
எனவே, அன்றைய தினம் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் நீராடி புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை பகிர்ந்துகொண்டு, சேர்ந்து உண்ணும் பாங்கு நமது சமயத்திலே ஏற்பட்டுள்ளது. மிக முக்கிய விழாவாக உலகமெங்கும் கொண்டாடப்படுவது தீபாவளி பண்டிகை.
தீபம், ஆவளி என்று பிரித்தால் தீபத்தை வரிசையாக வைத்து வழிபாடு செய்வது. தீபத்தை வரிசையாக வைத்து வழிபாடு செய்வதால் தீபாவளி என்று கொண்டாடுகின்றோம். நம்மிடம் உள்ள அசுரத்தன்மைகள், மலமாயைத் தன்மைகள் எல்லாம் அழிந்து நல்லவர்களாக மாற வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட முடியாமல் போன தீபாவளி பண்டிகையை, நிகழாண்டு அரசின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு கொண்டாட நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகாலையில் 'அண்ணாத்த' அதிரடி; மும்பையில் முதல் ஷோவுக்கு குவிந்த ரசிகர்கள்