ETV Bharat / state

திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா..ஒரே நேரத்தில் 5 தேர்கள் வீதி உலா..

author img

By

Published : May 30, 2023, 1:19 PM IST

காரைக்கால் திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழாவில் 5 தேர்கள் ஒரே நேரத்தில் வீதி உலா வந்தது
காரைக்கால் திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழாவில் 5 தேர்கள் ஒரே நேரத்தில் வீதி உலா வந்தது

காரைக்கால் திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழாவில் 5 தேர்கள் ஒரே நேரத்தில் வீதி உலா வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு “நள்ளாரா தியாகேசா” என்று முழுக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காரைக்கால் திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழாவில் 5 தேர்கள் ஒரே நேரத்தில் வீதி உலா வந்தது

காரைக்கால்: திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உலகப் பிரசித்திப் பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த மாதம் ஏப்ரல் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விநாயகர் வீதி உலா, சுப்பிரமணியர் மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா, பஞ்சமூர்த்திகள் வீதி உலா, தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. விழாவை ஒட்டி நேற்று தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செண்பக தியாகராஜ சுவாமி தேருக்கு எழுந்து அருளினார். இதே போல் மற்றொரு தேரில் நீலோத்பாலாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்து அருளினார். அதைத் தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தேர்களில் எழுந்து அருளினர். பின்னர் தேர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அத்துடன் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில குடிமை பொருள் துறை அமைச்சர் சாய் சரவணன், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் சிவா, கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில்கள் நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து “நள்ளாற தியாகேசா தியாகேசா” என்று முழக்கமிட்டு இழுத்து சென்றனர்.

ஒரே நேரத்தில் 5 தேர்கள் இழுப்பதால் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். ஆர்வத்துடன் ஒவ்வொரு தேர்களையும் இழுத்து சென்றனர். நாளை 31 ஆம் தேதி இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணைய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நள்ளிரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

விழாவின் மற்றொரு நிகழ்ச்சியாக நாளை மறுநாள் ஜுன் ஒன்றாம் தேதி இரவு தெப்போற்சவம் நடைபெற உள்ளது. தற்போது நடைபெற்று வரும் தேரோட்டத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதையும் படிங்க: விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழா: நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.