ETV Bharat / state

Aadi Perukku: காவிரி துலா கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம் - மங்கலப் பொருள்கள் வைத்து வழிபாடு!

author img

By

Published : Aug 3, 2023, 4:39 PM IST

Etv Bharat காவிரி துலா கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
Etv Bharat காவிரி துலா கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள், திருமண தம்பதிகள் காவிரி படித்துறையில் மங்கலப் பொருள்களை வைத்து படையல் வைத்து வழிபட்டனர். மேலும், புதுமணத் தம்பதியினருக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்குகளும் நடைபெற்றன.

காவிரி துலா கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்

நாகப்பட்டினம்: தமிழர்களின் பாரம்பரியமிக்க ஆடி 18ஆம் பெருக்கு விழா காவிரிக் கரை, முக்கிய நீர் நிலைகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென்மேற்குப் பருவத்தில் ஆற்றின் நீர் பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக உறுதுணையாக இருக்கும் தண்ணீரை தெய்வமாக மதித்து, நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டில் ''ஆடிப்பெருக்கு விழா'' கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் தமிழ்நாடு முழுவதும் காவிரி டெல்டா மாவட்டம் மற்றும் முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டியுள்ளது. காவிரியில் புனித நீராடிய பின்னர், இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி, காவிரி அன்னையை பொதுமக்கள் வழிபட்டனர்.

கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும் என்று சுமங்கலிகள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியைப் பிரித்து புதுத்தாலியை கட்டுவர். வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிட்டார்கள். புதுமணத் தம்பதிகள், திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை வாழை இலையில் வைத்து காவிரி ஆற்றில் விடுவதும் வழக்கம்.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரிதாயை வரவேற்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் காவிரி கரையில் படையலிட்டு வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட காவிரி படித்துறையில் தலைவாழை இலையை விரித்து அதில், காமாட்சி விளக்கு, கண்ணாடி, வளையல், கருகமணி, தேங்காய், பழங்கள், மாவிளக்கு, காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையல் இட்டு ஏராளமான பெண்கள் வழிபாடு நடத்தினர்.

இவ்வாறு வேண்டுவதால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை. இதனால் புதுமண தம்பதியினர் இன்றைய தினத்தில் தங்களது தாலியைப் பிரித்து புது தாலியை அணிந்து கொண்டனர். காவிரி துலாக் கட்டத்தில் இரண்டு கரைகளிலும் அதிகாலை முதல் ஏராளமான பெண்கள் படித்துறையில் பூஜை நடத்தி காவிரியை வழிபட்டு வருகின்றனர்.

மேலும் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள காவிரித்தாய் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை காவல் துறையினர் பாதுகாப்புப் பணியிலும், நகராட்சி ஊழியர்கள் சுகாதாரப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

குறைந்த அளவு புதுமணத் தம்பதிகள் கருகமணி, விளாம்பழம், பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் பச்சரிசி ஆகியவற்றை வைத்து காவிரித் தாய்க்கு பெண்கள் படையலிட்டு வழிபட்டனர். ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிவித்துக் கொண்டனர். புதிதாக திருமணமான தம்பதியினர் படையல் இட்டு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆடிப்பெருக்கின்போது கூட்டம் அலைமோதும் பூம்புகார் கடற்கரை தற்போது களையிழந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: Aadi Perukku: தஞ்சையில் ஆடிப்பெருக்கு கோலாகலம்.. காவிரியில் புனித நீராடிய மக்கள் தக்காளி விலை குறைய வேண்டுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.