ETV Bharat / state

மண்ணில் உலவும் தேவதைகள் செவிலியர்கள்.

author img

By

Published : May 12, 2021, 2:23 PM IST

celebrating world nurse day
celebrating world nurse day

கரோனா தொற்றுக்குப் பிறகு செவிலியரின் பணி எத்தகைய மதிப்பு வாய்ந்தது என்பதை உலகமே உணரத் தொடங்கியிருக்கிறது. இன்று (மே.12) உலக செவிலியர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர்களின் அப்பழுக்கற்ற சேவைகளை நினைத்துப் பார்க்க வேண்டிய தருணம் இது.

கை விளக்கேந்திய காரிகை என்று போற்றப்படுகின்ற ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) அம்மையாரின் பிறந்த நாளே (மே.12) ஒவ்வொரு ஆண்டும் உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், முன்கள பணியாளர்களாகத் திகழும் செவிலியர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் பணியும் சேவையும் போற்றுதலுக்குரியது.

மனித உயிர்களைக் காக்கும் தேவதைகள்
மனித உயிர்களைக் காக்கும் தேவதைகள்

59 நாடுகளில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை இரண்டாயிரத்து 710 செவிலியர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் வரை 34 நாடுகளைச் சேர்ந்த செவிலியர் உள்பட அனைத்து விதமான சுகாதாரப் பணியாளர்களில் 16 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செவிலியர் கவுன்சில் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான நாடுகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்களில் செவிலியர்கள் கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களாக உள்ளனர் என்றும் இதற்கு உதாரணமாக மெக்சிகோ நாட்டில் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் 41 விழுக்காட்டினர் செவிலியர்களே எனவும் அந்தக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற மிகப் பெரும் மக்கள்தொகை கொண்ட நாடுகளில் செவிலியரின் பணி மிக உன்னதமானது. பாதிக்கப்பட்டவர்களை உறவினர்களே தொடத்தயங்கும் சூழலில் நோயாளிகளை தங்களது குழந்தைகளைப்போல் பாவிக்கும் செவிலியர் தாய்மார்களுக்கும் மேலான 'அம்மன் சாமிகள்' என்றால் அது மிகையல்ல.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் அன்னக்காமு கூறுகையில், "கரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது 35 நாள்கள் கரோனா வார்டில் நோயாளிகளுக்கு சேவை செய்தேன். தற்போது இரண்டாம் அலையில் ஒரு வாரம் பணியில் உள்ளேன். இரண்டாவது அலை எதிர்பார்த்ததைவிட மிகத் தீவிரமாக உள்ளது.

நாள்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது எங்களுக்கே மலைப்பாகவும் அச்சமாகவும் உள்ளது. எப்படியாவது எங்களைக் காப்பாற்றிவிடுங்கள் என்ற நோயாளிகளின் பார்வையும் ஏக்கமும் மிக வேதனைப்படவைக்கிறது. இந்தப் பணியை மனித குலத்திற்கு ஆற்றும் சேவையாக நான் பார்க்கிறேன்" என்கிறார்.

world-nurse-day-special-news
மனித உயிர்களைக் காக்கும் தேவதைகள்

செவிலியர்கள், குடும்ப உறவுகளை மறந்து கரோனா சிகிச்சை மருத்துவ மையங்களையே வீடாகக் கொண்டு வாழ்கிறார்கள். பணி செய்யும் நாள்களில் தொலைபேசியில் கூட தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு அவர்களுக்கான பணி பளு அதிகரித்து விடுகிறது. ஆனாலும் ஏற்றுக்கொண்ட பணிக்காகவே தங்களை செவிலியர் அர்ப்பணித்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

மற்றொரு செவிலியர் சண்முகப்பிரியா கூறுகையில், "தமிழ்நாடு அரசு எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. ஆனால், பொதுமக்கள் தான் மிகவும் கவனக்குறைவாக உள்ளனர். தேவையான விழிப்புணர்வு வழங்கப்பட்டும் கூட, அவர்களின் அஜாக்கிரதை நோயின் தீவிரம் அதிகரிக்க காரணமாகிறது.

ஒவ்வொரு நாளும் இங்கே அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகளைப் பார்க்கும் போது எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. முகக்கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி இவற்றை சரியாகக் கடைப்பிடித்தாலே கரோனாவை முழுவதுமாக வென்றுவிட முடியும். செவிலியர் பணி என்பது மிக சவாலான ஒன்று தான் என்றாலும், இதனை மனமுவந்து நான் நேசிக்கிறேன்" என்கிறார்.

நேரம் காலம் பார்க்காது, கண் துஞ்சாது, சோர்வு கொள்ளாது கண்ணை இமை காப்பது போன்று நோயாளிகளைக் காப்பது இறைப்பணிக்கு ஒப்பாகும். அதனை மேற்கொள்கின்ற செவிலியர் ஒவ்வொருவரும் உன்னதமானவர்கள். தமிழ்நாடு அரசு விரைந்து செவிலியருக்கான காலிப்பணியிடங்களை நிரப்பினால், எங்களின் சுமை குறையும் என தங்களது வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர். உலக செவிலியர் தினத்தில் அவர்களின் இந்த வேண்டுகோளுக்கு புதிய அரசு செவிமடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: நீண்ட நேரப் பணி: சோர்வில் தரையிலேயே அமர்ந்திருந்த செவிலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.