ETV Bharat / state

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கப்படுமா தமிழ்? சட்டம் சொல்வது என்ன?

author img

By

Published : Apr 1, 2023, 7:54 PM IST

Tamil is the colloquial language
தமிழ் வழக்காடு மொழி

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இவ்விவகாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திசை திருப்ப முயல்வதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் பகவத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் முன்வைக்கும் வாதங்கள் என்ன? விரிவாக பார்ப்போம்...

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கப்படுமா தமிழ்?

மதுரை: உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், மேற்குவங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என, அரசியலமைப்பு சட்டம் கூறுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அண்மையில் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, கடந்த 25-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற புதிய நீதிமன்ற கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்குப் பதிலளித்துப் பேசிய தலைமை நீதிபதி, இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கூறியிருந்தார்.

சட்டம் சொல்வது என்ன?: இந்நிலையில், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியவரும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் மூத்த வழக்கறிஞருமான பகவத்சிங், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அவர் கூறுகையில், ”உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்தப் பேச்சு புதிய செய்தியாக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. முதலாவதாகக் கொண்டு வரப்பட்ட திருத்தமில்லாத அந்தச் சட்டத்திலேயே பிரிவு 348 உட்கூறு 2-ல் மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் 1950-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள், ராஜஸ்தான் மாநிலத்தின் உயர்நீதிமன்ற மொழியாக அந்த மாநில மொழியான இந்தி அறிவிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து வெறும் 18 நாட்களில் இந்த அறிவிப்பு நிகழ்ந்தது.

"திசை திருப்ப முயற்சி": ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழ்மொழி குறித்த கோரிக்கைக்கு அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டியதிருக்கும் என்று கூறி இந்தச் சிக்கலை திசை திருப்ப முயல்கிறார். இது மிகுந்த வேதனைக்குரியது. ஏற்கனவே உச்சநீதிமன்றம், கடந்த 1997-ஆம் ஆண்டு வங்காளத்தின் முதல் கோரிக்கையை ஏற்க மறுத்தது. அதன்பிறகு கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. அதையும் ஏற்க மறுத்தது. பிறகு 2012-ல் குஜராத் முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி அம்மாநில மொழியை அறிவிக்க கோரிக்கை வைத்தார். அதுவும் மறுக்கப்பட்டது.

அதேபோன்று கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா 2014-ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தார். அதுவும் ஏற்கப்படவில்லை. கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழ், கன்னடம், குஜராத் மற்றும் வங்காள மொழிகளுக்கான கோரிக்கைகளையும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதைப் போன்று இதற்கு அரசியலமைப்பு சட்டத் திருத்தமெல்லாம் அவசியமில்லை. கடந்த 1950-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே இதற்கான பிரிவுகள் உள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் தலைமை நீதிபதியாக இருந்த போது, மாநில மொழி குறித்த கோரிக்கையில் எதுவும் சொல்லாமல் நழுவிச் சென்றுவிட்டார். அவரும் அந்தக் கோரிக்கையை பரிசீலிக்க மறுத்துவிட்டார். தற்போதைய தலைமை நீதிபதி மும்பையைச் சேர்ந்தவர். அவரது தாய்மொழி மராத்தி. அவரும்கூட தனக்கு இந்தி தெரியாது என்றுதான் கூறுகிறார். ஆகையால் மாநில மொழிகளுக்கான உரிமையை அவர் கூட மறுப்பது மிகவும் வருந்ததத்தக்கது. அவர் ஒன்றும் சட்டம் தெரியாதவரல்ல. ஏறத்தாழ 3000 பேர் அமர்ந்திருக்கக்கூடிய ஒரு கூட்டத்தில், இதுபோன்று பேசிவிட்டுச் செல்வது திசை திருப்பும் முயற்சிதான். தமிழகத்திலுள்ள வழக்கறிஞர்களும், பொதுமக்களும் இந்தக் கோரிக்கை வெற்றி பெறும் வரை போராட முன் வர வேண்டும்” என்றார்.

”தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும்”: தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி தீர்மானம் இயற்றியது. அண்மையில் பாமக தலைவர் ராமதாசும் கோரிக்கை வைத்துள்ளார். மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி வலியுறுத்த வேண்டும். ஆனால் அரசியலமைப்புச் சட்டம் 348-2 சட்டமன்ற தீர்மானங்களைப் பற்றியெல்லாம் கூறவில்லை. தமிழக ஆளுநர், குடியரசுத்தலைவரின் முன் ஒப்புதலுடன் நீதிமன்ற மொழியாக தமிழை அறிவிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது எளிய நடைமுறைதான்.

தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துவிட்டால், ஆளுநர் கையெழுத்து மட்டும்தான் போட வேண்டும். குடியரசுத்தலைவரும் அப்படித்தான். ஆகையால் தமிழக முதல்வர் ஸ்டாலின், திரும்பத் திரும்ப கோரிக்கை வைக்காமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். 1965-ல் மத்திய அமைச்சரவைக் குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் நீதிமன்ற மொழியாக மாநில மொழிகளை அறிவிப்பதற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் இது போன்ற எந்தக் கூறும் அரசியலமைப்புச் சட்டத்தில் கிடையாது. 2015-2016ம் ஆண்டில் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்த நாடாளுமன்றக் குழுவும் உச்சநீதிமன்றத்திடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளது. ஆகையால் மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றக் கருத்துக் கேட்பு என்பது நம்மை ஏமாற்றும் செயல். எனவே தமிழக அரசு, உச்சநீதிமன்றத்திடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற மொழியாக மாநில மொழிகளை மத்திய அரசே அறிவியுங்கள் என வலியுறுத்த வேண்டும்.

ஏற்கனவே 1965-ஆம் ஆண்டில் தீர்மானித்த மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத் தீர்மானத்தை ரத்து செய்துவிட்டு, அனைத்து மாநில மொழிகளையும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும். தற்போது பிரதமராக இருக்கின்ற மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது எழுப்பிய கோரிக்கை கிடப்பில் உள்ளது. ஆகையால் தமிழக அரசு கோரிக்கை எழுப்பிக் கொண்டிராமல் மத்திய அரசுக்கு கடும் அழுத்தம் தர வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால், இந்தி மொழியில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 300 தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் வெறும் 56 மட்டும்தான். இந்த இரண்டுக்குமான எண்ணிக்கையில் எவ்வளவு வேறுபாடுகள். அதுமட்டுமன்றி, உச்சநீதிமன்றத்தை நாடுவோர் எத்தனை பேர்? உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாகின்ற 100 வழக்குகளில் ஒரு வழக்குகூட உச்சநீதிமன்றம் செல்வதில்லை. ஆகையால் வெறும் 56 தீர்ப்புகளை மட்டுமே மொழி பெயர்ப்பது போதுமானதல்ல. தற்போது அதற்கான தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட நிலையில், அனைத்து தீர்ப்புகளையும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். முக்கியமாக, தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களிலும் முழுமையாக தமிழில் இல்லை. இதையும் தமிழக அரசு மாற்ற வேண்டும்.

தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் 1956-ஐ திருத்தி உயர்நீதிமன்றத்திற்கு கீழேயுள்ள கீழமை நீதிமன்றங்களில் தமிழ் மட்டுமே வழக்காடு மொழி என மாற்றம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் 56 தமிழில் மொழி மாற்றப்பட்டுள்ளது என்பதைவிட உயர்நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும் தமிழை உறுதி செய்வதே மிக முக்கியமானது. உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் வழக்குகள் மிகக் குறைவுதான். ஆனால் கீழமை மற்றும் உயர்நீதிமன்றங்களில் எளிய மக்கள்தான் செல்கின்றனர். அவர்களுக்கான தீர்ப்பு தமிழ்மொழியில் வருவதையே தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தீர்ப்பு மட்டுமன்றி, அந்த வழக்குகளை தமிழ்மொழியில் நடத்துவதுதான் மிகவும் அவசியம்” என்றார்.

இதையும் படிங்க: கலாஷேத்திரா பாலியல் புகார் விவகாரம்: கல்லூரி இயக்குநர் ஆஜராக மகளிர் ஆணையம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.