ETV Bharat / state

வேங்கைவயல் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான உத்தரவுக்கு எதிரான வழக்கில் திருப்பம்!

author img

By

Published : Jun 24, 2023, 9:46 AM IST

Etv Bharat
Etv Bharat

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை செய்வது தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கடந்த ஆண்டு டிசம்பரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு விதமான தீண்டாமைகள் நடைபெற்று வரும் சூழலில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி துணை காவல் ஆய்வாளர், தவறு செய்தவர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடாமல், தொடர்ச்சியாக பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக்க முயன்று வருகிறார்.

என்னையும், இதில் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத சுபா என்பவரையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளார். இது சட்டவி ரோதமானது. ஆனால், சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் என் மீது குற்றம் சுமத்தும் நோக்கத்தில் தொடர்ச்சியாக தொல்லை செய்து மிரட்டி வருகிறார்.

ஏற்கனவே டிஎன்ஏ செய்த நபர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவில்லை. ஆகவே, டிஎன்ஏ பரிசோதனை செய்வது தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதோடு, என்னை டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி, வேங்கை வயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை யார், யாருக்கு மேற்கோள்ள உள்ளோம் என்பது குறித்து விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் மனு அளிக்க வேண்டும். அதன் பிறகு, நீதிபதி டிஎன்ஏ சோதனை நடத்த உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

அதனைத் தொடர்ந்து அவர்களது விளக்கத்தை கேட்டு, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

பல பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வன்கொடுமை சட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. 3 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்ற நிலையில் 8 பேர் பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மொத்தமாக 119 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் தூங்கிக்கொண்டிருந்த மருத்துவத்துறையை தட்டி எழுப்பியுள்ளோம்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.