ETV Bharat / state

ஜனநாயகத்திற்குப் புறம்பான ஊபா சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - பியூசிஎல் தேசிய செயலாளர் முரளி

author img

By

Published : Feb 17, 2021, 9:36 PM IST

பியூசிஎல் தேசிய செயலாளர் முனைவர் முரளி  யுஏபிஏ சட்டம்  ஜனநாயகத்திற்கு புறம்பான யுஏபிஏ சட்டம் திரும்ப பெறப்பட வேண்டும்  UAPA Law  The UAPA law, which is anti-democratic, should be withdrawn  PUCL National Secretary Dr. Murali
PUCL National Secretary Dr. Murali Press Meet

ஜனநாயகத்திற்குப் புறம்பான ஊபா (UAPA) சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் நபர்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவுவதையும் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பியூசிஎல் தேசியச் செயலாளர் முனைவர் முரளி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'தமிழ்நாடு மக்கள் விரோத பாசிச பாஜகவை சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிப்போம்' என்ற இயக்கம் நடத்திய தோழர் பாலன், செல்வராஜ், சீனிவாசன், சித்தானந்தம், விவேக் ஆகியோர் ஊபா ((UAPA)) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் நபர்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவுவதைக் கண்டித்தும் மதுரையில் பல்வேறு அமைப்புகளின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, முனைவர் முரளி கூறுகையில், 'மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசும் மாற்றுக்கருத்து கொண்டவர்களை முன்பிணை பெறமுடியாத, ஆள்தூக்கி கொடுஞ்சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தை (UAPA) கொண்டும், தேசிய புலனாய்வு அமைப்பை (NIA) பயன்படுத்தி வருடக்கணக்கில் சிறையில் அடைத்தும் வருகிறது.

கடந்த 2019ஆம் வருடம் அக்டோபர் மாதம் 28, 29ஆம் தேதி கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வனப்பகுதியில் தண்டர்போல்ட் காவல் படையால் மாவோயிஸ்ட் மணிவாசகம் உள்ளிட்ட 3 பேர் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட மணிவாசகத்தின் உடலை பார்ப்பதற்குக்கூட மணிவாசகத்தின் தங்கை லட்சுமிக்கு கேரள காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கொல்லப்பட்ட மணிவாசகரின் உடலை பார்க்க, மணிவாசகம் பிறந்த ஊரான சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி, ராமமூர்த்தி நகரில் உடலை அடக்கம் செய்யவும், இறுதி நிகழ்வில் சிறையிலிருந்த மணிவாசகத்தின் இணை கலா, தங்கை சந்திரா கலந்துகொள்ளவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 14.11.2019ஆம் தேதியன்று, நடந்த மணிவாசகத்தின் இறுதி நிகழ்வில் மணிவாசகத்தின் உறவினர்கள், நண்பர்கள், சனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கொல்லப்பட்ட மணிவாசகத்தின் இறுதி நிகழ்வு நடந்து முடிந்து 64 நாள்கள் கழிந்த பின்பாக ஒரு பொய் வழக்கை சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலையம் குற்ற எண்.14/2020-ன் படி 188, 120, 121, 121(A), 124(A), இ.த.ச, 10,13,15,18 யுஏபிஏ-யின் (UAPA) கீழ் பதிவு செய்து மணிவாசகத்தின் உடன்பிறந்த தங்கை சந்திரா, லட்சுமி, அவரது கணவர் சாலிவாகனன், அவர்களது மகன் சுதாகர், மணிவாசகரின் இணை கலா, மாவோயிஸ்ட் அரசியல் சிறைவாசிகள் விடுதலை குழுவைச் சார்ந்த விவேக் ஆகியோரைக் கைது செய்தது.

இந்நிலையில், "தமிழக மக்கள் விரோத பாசிச பாஜகவை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம்" என்ற இயக்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை சென்னையிலும், சேலத்தில் ஆலோசனைக் கூட்டத்தையும் முடித்துவிட்டு வீட்டில் இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர் சீனிவாசன், தோழர் செல்வராஜ், தோழர் சித்தானந்தம் ஆகியோரைப் போலி மோதலில் கொல்லப்பட்ட மணிவாசகத்தின் இறுதி நிகழ்விற்காக ஏவப்பட்ட வழக்கில், ஒரு ஆண்டிற்கு மேலாக தலைமறைவாக இருந்ததாகக் கூறி கொடுஞ்சட்டமான யுஏபிஏவின் (UAPA) கீழ் கைது செய்துள்ளனர்' என்றார்.

மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் கூறுகையில்,"சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மனிதர்களுக்காகவே நாங்கள் பேச வந்திருக்கிறோம். கடந்தாண்டு ஜனவரி மாதம் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இந்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி காலை 4.30 மணிக்கு கைது செய்கிறார்கள் என்றால், அதற்கு ஒப்புதலளித்த நீதித்துறை நடுவர் செயலை எப்படிப் பார்ப்பது?.

நீதித்துறையின் மாண்பைப் பாதுகாக்கும் கடமை கீழமை நீதிமன்றங்களுக்கே உண்டு. இந்த வழக்கில் நீதித்துறை சரியாகச் செயல்படவில்லை என்பதே எங்களது குற்றச்சாட்டு. அதே தமிழ்நாட்டில் மே 17 திருமுருகன் காந்திக்கு எதிராக யுஏபிஏ வழக்கினை தமிழ்நாடு அரசு தொடுத்தபோது, நீதித்துறை நடுவர் இதுகுறித்து பல மாதங்கள் பரிசீலனை செய்தார். பிறகு அந்த வழக்கை யுஏபிஏ-வின் எடுத்துக் கொள்ள மறுத்ததும் நடைபெற்றது' என்றார்.

பியூசிஎல் தேசியச் செயலாளர் முரளி செய்தியாளர் சந்திப்பு
நிறைவாக யுஏபிஏ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட தோழர் பாலன், செல்வராஜ், சீனிவாசன், சித்தானந்தம், விவேக் ஆகியோரை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும். மருத்துவர் தினேஷ் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். சோதனை என்ற பெயரில் சமூக செயல்பாட்டாளர்களை அச்சுறுத்தக்கூடாது. இறுதி நிகழ்வைக் கூட குற்றமாக்கும் கொடுஞ்சட்டமான யுஏபிஏ (UAPA) திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: 'குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு அவசரம் ஏன்?' - பியூசிஎல் தேசியச் செயலாளர் பேராசிரியர் முரளி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.