ETV Bharat / state

கரூர் வருமான வரி சோதனை - 19 பேருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கோரிய மனு ஒத்திவைப்பு!

author img

By

Published : Jul 10, 2023, 10:41 PM IST

கரூரில் வருமான வரி சோதனையின் போது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் 19 பேருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமினை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை அதிகாரிகள் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை

மதுரை: வருமான வரித்துறையின் துணை இயக்குநர் யோக பிரியங்கா, உதவி இயக்குநர் கிருஷ்ணகாந்த், ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், "கடந்த மே 25ஆம் தேதி வருமான வரி முறைகேடு செய்ததாக கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், மாரப்ப கவுண்டர், குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோரது வீடுகளில் சோதனை செய்தோம்.

சோதனை நடைபெற்ற இடங்களுக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். நாங்கள் சோதனை செய்த உரிமையாளர்களிடம் கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு தெரிவித்தோம். வெளியே கூடி இருந்த நபர்கள் மோசமான வார்த்தைகளில் வருமான வரி துறையினரை பேசினர். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த கூட்டம், வருமானவரி துறையினரான எங்களை தாக்கியதோடு பணி செய்ய விடாமல் தடுத்தனர். கூட்டம் அதிகரிக்கவே, அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தந்த இடங்களை விட்டு வெளியேறினோம்.

மறுநாள் சிஆர்பிஎஃப் வீரர்களின் உதவியுடன் சோதனையை தொடர்ந்தோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், தலைமறைவாக இருந்தவர்களுக்கு கரூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமின் மற்றும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல.

ஆகவே வழக்கில் கைது செய்யப்பட்ட 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், கைது செய்யப்பட்ட 19 நபர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி வழக்கை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை.. மனு அளிக்க வருவோரின் துயரம் தீருமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.