ETV Bharat / state

தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் ஓமன் நாட்டில் பாலியல் தொழிலுக்கு ஏலம் விடுவதாக சர்ச்சை.. பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 11:19 AM IST

Updated : Aug 27, 2023, 9:04 AM IST

Etv Bharat ஓமன் நாட்டில் பாலியல் தொழிலுக்கு ஏலம் விடப்படும் தமிழ் பெண்கள்
Etv Bharat ஓமன் நாட்டில் பாலியல் தொழிலுக்கு ஏலம் விடப்படும் தமிழ் பெண்கள்

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்களை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கே சிக்கி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் நாட்டில் பாலியல் தொழிலுக்கு ஏலம் விடப்படும் தமிழ் பெண்கள்

மதுரை: இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி வளைகுடா நாடுகளான சவுதி அரேபியாவில் 27 லட்சத்து 94 ஆயிரத்து 947 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 34 லட்சத்து 25 ஆயிரத்து 144 பேரும், கத்தாரில் 7 லட்சத்து 46 ஆயிரத்து 550 பேரும், பஹ்ரைனில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 658 பேரும், ஓமனில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 141 பேரும் பணி நிமித்தமாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் உடல் உழைப்புத் தொழிலாளர்களாவர். இது போக அபுதாபி, குவைத், ஷார்ஜா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் ஏராளமானோர் புலம் பெயர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் வீடு மற்றும் அலுவலக வேலைக்கு என்று முகவர்களால் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஏலத்துக்கு விடப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் ஓமன் நாட்டில் சிக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறுகையில், "காரைக்குடியில் உள்ள ஒரு முகவர் மூலமாக மஸ்கட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து என்னையும் என்னோடு வந்த வேறு சில பெண்களையும் ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள ஒரு முகவரிடம் எங்களை ஒப்படைத்தனர். அவர் ஒரு அறையில் எங்கள் அனைவரையும் அடைத்து வைத்தனர். அதுபோன்ற ஒவ்வொரு அறையிலும் சுமார் 2 ஆயிரம் பெண்கள் இருந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் மட்டும் 200 பேருக்கும் மேல் இருந்தனர். அதுபோன்ற அறைகள் நூற்றுக்கும் அதிகமாக அங்குள்ளன. வேலைக்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லும்போது, எந்தவித பணமும் தேவையில்லை. அலுவலகம் மற்றும் வீட்டு வேலைப் பணிகள் என்று சொல்லியே அழைத்துச் செல்கின்றனர்.

ஆனால் அங்கு அவர்களின் தேவைக்காக பெண்களைப் பயன்படுத்துகின்றனர். ஆசைக்கு இணங்காதவர்களை, ஊருக்கு அனுப்ப முடியாது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயைக் கட்டினால் மட்டுமே உங்களை அனுப்ப முடியும் என்று சொல்லிவிடுகிறார்கள். மிக ஏழ்மையான நிலையில்தான் பணம் கட்ட இயலாமல் இதுபோன்று வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறோம். ஆனால், அங்கிருந்து வெளியேற வேண்டுமானால் பணத்தைக் கட்டு என்று நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். ஒருவேளை ஏதேனும் ஒரு வாய்ப்பில் தப்பித்து அங்குள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்றால், தூதரக அலுவலர்கள் மீண்டும் முகவர்களிடமே அப்பெண்களை ஒப்படைத்து விடுகின்றனர்.

அப்படி கொண்டு வரப்படும் பெண்களை பெல்ட் உள்ளிட்டவற்றால் அடித்து கொடுமைப்படுத்துகின்றனர். சில பெண்கள் அவர்கள் கேட்ட ஒன்றரை லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். மதுரையில் உள்ள உதிரத்துளிகள் என்ற அறக்கட்டளை மூலமாக தொடர்பு கொண்டதால் நான் மீட்கப்பட்டுள்ளேன். என்னைப்போன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

உதிரத்துளிகள் என்ற அமைப்பின் நிறுவனர் அஸாருதீன் கூறுகையில், “தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளுக்கு வீட்டு வேலை செய்வதற்காக சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது நீண்ட காலமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு கிராமப்புறங்களைச் சேர்ந்த படிப்பறிவற்ற பெண்களை ஒரு ரூபாய் கூடக் கட்டத்தேவையில்லை. மாதம் ரூ.30 ஆயிரம் அல்லது ரூ.40 ஆயிரம் சம்பளம் என ஆசை வார்த்தைகள் காட்டி அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழிலுக்காக அடிமையாக விற்கக்கூடிய நிலை உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் எங்களுடைய அறக்கட்டளை சார்பாக 35 பெண்களை மீட்டுள்ளோம். விசிட்டிங் விசாவில் செல்லக்கூடிய பெண்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த விசாவில் செல்லக்கூடிய பெண்கள் மீண்டும் ஒரு மாதத்தில் திரும்பவும் நமது நாட்டிற்குத் திரும்பிவிட்டால் பிரச்னை இல்லை. அங்கு சென்றபிறகு வேலை வாய்ப்புக்காக வாழத் தொடங்கும்போது, அங்கு அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது.

அந்த நாட்டைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய குற்றச் செயலாகும். அதுபோன்ற பெண்களை மீட்டுக் கொண்டு வருவது சாதாரண செயல் அல்ல. அங்குள்ள இந்தியத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டாலும் எந்தவிதமான ஆதரவும் கிடைப்பதில்லை. அங்குள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்களைத் தொடர்பு கொண்டுதான் இவர்களைக் காப்பாற்றிக் கொண்டு வர முடிகிறது. ஆண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, காவல் துறையின் தடையில்லா சான்று அவசியம்.

அது மட்டுமன்றி, யார் மூலமாக வேலைக்குச் செல்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்கிற விபரங்களை எல்லாம் காவல் துறையில் பதிவு செய்தால்தான் மேற்கண்ட சான்றிதழ் கிடைக்கும். அதேபோன்ற விசிட் விசாவில் செல்லக்கூடியவர்களுக்கும் காவல் துறையின் தடையில்லா சான்றினை வழங்கும் நடைமுறையைக் கொண்டு வர வேண்டும். ஒருசிலரை நாங்கள் மீட்டுக் கொண்டு வரும்போது, அவர்களுக்குத் தெரியாமலேயே தங்கக்கட்டிகளை வைத்து அனுப்பிவிடுகிறார்கள். இங்கு வந்து இறங்கும்போது திருட்டுக் குற்றச்சாட்டுடன் காலம் முழுவதும் காவல் நிலையத்திற்கு அலையக்கூடிய சூழ்நிலை அப்பெண்களுக்கு உள்ளது. இவையனைத்தையும் கவனத்தில் கொண்டு அரசு, வெளிநாடு செல்லக்கூடிய பெண்களுக்கான சட்டங்களை மேலும் வலுவுள்ளதாக மாற்ற வேண்டும்” என்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்க உதவிய சமூக ஆர்வலர் நாகேஸ்வரன் கூறுகையில், “வறுமையால் துன்பப்படும் பெண்கள் வட்டிக்குக் கடன் வாங்கி பிள்ளைகளைப் படிக்க வைக்க இயலாமல், கணவர் சரியில்லாத காரணங்களால் இதுபோன்ற பெண்களை ஒரு சில முகவர்கள் ஆசை வார்த்தைகளைக் காட்டி வெளிநாட்டு வேலை என அழைத்துச் செல்கிறார்கள். இதற்கிடையே பல்வேறு முகவர்கள் உள்ளனர். வெறுமனே சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று அங்கே அப்பெண்களை இன்னலுக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். அங்கு சென்ற பிறகு அவர்களுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டால் பல்வேறு சலுகைகளோடு அப்பெண்கள் வாழ முடியும்.

அவ்வாறு ஒத்துழைக்காத பெண்களை பல்வேறு வகையிலும் கொடுமைப்படுத்துகின்றனர். இந்தப் பெண்களை அங்கே ஏலத்துக்கு விட்டு பாலியல் தொழிலுக்குள் தள்ளி விடுவதாக நான் அறிகிறேன். மத்திய, மாநில அரசுகள் இந்த விசயத்தில் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும். அதுபோன்று பாதிக்கப்பட்ட பெண் குறித்த விபரம் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி எனது கவனத்திற்கு வந்தது. உடனடியாக தொடர்புள்ள பெண்ணின் உறவினரோடு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை அணுகினேன். அவரும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். அதற்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் மிகப் பாதுகாப்புடன் நாடு திரும்பினார். இவரைப் போன்று நிறைய பெண்கள் அங்கே பாதிக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. இதனை உடனடியாகக் கவனத்திற்கு கொண்டு, தனி குழு ஒன்று அமைத்து மீட்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 24 மணி நேரமும் சிறுநீர் வெளியேறுவதால் பெண் அவதி: தனியார் மருத்துவமனையின் சிகிச்சை காரணமா?

Last Updated :Aug 27, 2023, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.