ETV Bharat / state

மதுரை விமான நிலையத்தை நிராகரிப்பத்து ஏன்? - சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 6:26 PM IST

Etv Bharat
Etv Bharat

madurai mp su venkatesan: மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரம் இயக்க போதிய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லை எனக் காரணம் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவும், போதிய பாதுகாப்பு இல்லையெனில் இந்திய விமானத்துறை ஏன் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மதுரை: மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி, இணைத்தலைவர் சு.வெங்கடேசன் எம்பி தலைமையில் இன்று (அக்.10) நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்பி, “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். அதேபோல, பைலேட்டர் ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க வேண்டும். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வாரத்திற்கு மூன்று நாட்கள் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி முதல் தினசரி விமானமாக இயக்கப்பட இருக்கிறது.

மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம்
மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம்

மதுரை விமானநிலையத்தின் ஓடு பாதையை விரிவாக்குகிற விஷயத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகள் என்பது முழு முற்றாக முடிவடைந்து இருக்கிறது அதில் கடந்த ஓராண்டாக தமிழக அரசு பல நல்ல முயற்சிகளை செய்தது. அதன் விளைவாக தனி நபர்களிடமிருந்து நிலங்கள் எடுக்கப்பட வேண்டியது முடிவு பெற்றுள்ளது. இரண்டு குளங்களினுடைய சிறு பகுதி என்பது வகை மாற்றம் செய்யப்பட வேண்டிய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அது முடிவடையும்' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 'இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து மதுரை விமான நிலையம் 24X7 விமான நிலையமாக செயல்படும் என்று விமானத்துறை அறிவித்த அறிவிப்பு, இப்பொழுது வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மதுரையின் விமான நிலைய வளர்ச்சியில் ஒன்றிய அரசு அக்கறையின்மை தொடர்ச்சியாக நீடிக்கிறது. பல அழுத்தங்களுக்கு பிறகு தான் 24x7 என்பதை ஒத்துக்கொண்டு அவர்கள் அறிவித்தார்கள். ஆனால், இன்றைக்கு வரை அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். அது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தென் மாவட்டங்களில் இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்து அதேபோல மதுரை விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களையும் இணைத்து ஒன்றிய அமைச்சரை சந்தித்து இது குறித்து வலியுறுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது' என்று கூறினார்.

மதுரை சர்வதேச விமான நிலையம் ஆவது அவசியம்: 'மதுரை மற்றும் தென் மாவட்ட தொழில் வணிக வளர்ச்சிக்கு மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது மிக முக்கியமான நடவடிக்கை. இதற்கு சொத்தை காரணங்களை மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு சொல்வது ஏற்க முடியாத ஒன்று. இன்னும் சொல்லப் போனால் நம்முடைய விமான நிலையத்தை பயன்படுத்துகிற உள்நாட்டு பயணிகளுடைய எண்ணிக்கையும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். “டொமஸ்ட்டிக்” விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமே நாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருக்கிறது. அதனை விட பலமடங்கு மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்கிற பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.

பாதுக்காப்பு படை வீரர்கள்?: மதுரை விமானநிலையம் ஏப்ரல் மாதத்திலிருந்து 24 மணி நேரமும் இயங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்ட ஆணையை நடைமுறைப்படுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? அதற்கு இப்பொழுது பாதுகாப்பு வீரர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்ற காரணத்தை சொல்கிறார்கள். போதிய பாதுக்காப்பு படை வீரர்கள் இல்லாமல் எப்படி இந்திய விமானத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது?

மத்திய அரசு மதுரைக்கு செலவு செய்ய மறுப்பதா?: அதேபோல் தேசிய நெடுஞ்சாலையை சுரங்க பாதை வழியே இயக்குவது என்ற ஒரு ஆலோசனை விமான துறையால் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், வாரணாசியில் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், மதுரை விமான நிலையம் என்று வருகிறபோது சுரங்கப்பாதை அமைக்க 600 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அதைவிட சுற்றுச்சாலைக்கு போனால், 100 கோடி ரூபாய்க்கு குறையும் என்று சொன்னார்கள். இந்த பொருளாதார கணக்கு ஏன் வாரணாசிக்கு பொருந்தவில்லை. அதே திட்டம் மதுரைக்கு என்று வருகிறபோது, 600 கோடி ரூபாய் செலவு வீண் என்று காரணம் சொல்கிறார்கள்' என்று கூறினார்.

இதையும் படிங்க: திமுக எம்.பி ஆ.ராசாவின் 15 பினாமி நிறுவன சொத்துக்களை கையகப்படுத்திய அமலாக்கத்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.