ETV Bharat / state

அள்ளிக் குவித்த சிறப்பு ரயில்கள் - ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்!

author img

By

Published : Dec 11, 2022, 3:08 PM IST

தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.2.96 கோடி தெற்கு ரயில்வே வருவாய் ஈட்டியதாக ஆர்டிஐ (RTI) மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், வரவுள்ள கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டு 2 மாதங்களுக்கு இதேபோல சிறப்பு ரயில்களை இயக்கினால் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேவுக்கு (Southern Railway) ரூ.2.96 கோடி வருமானமாகக் கிடைத்துள்ளது ஆர்டிஐ (Right to Information Act - RTI) முலம் தெரிய வந்துள்ளது. கடந்த அக்.24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டபோது, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து தீபாவளி சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்டன.

இந்நிலையில் தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்ட 'சிறப்பு ரயில்களுக்கான வருமானம்' குறித்து தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தெற்கு ரயில்வே அதிகாரி ரவீந்திரன் அளித்த பதிலில், அக்.18-ல் இருந்து நவ.3 வரை என மொத்தம் 34 ரயில்கள் இயக்கப்பட்டதில், 19 ரயில்கள் தெற்கு ரயில்வே மூலமாகவும், 15 மற்ற மண்டலங்கள் மூலமாகவும் தெற்கு ரயில்வே எல்லைக்குள் இயக்கப்பட்டன.

பெரும்பாலான ரயில்கள் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, கொச்சுவேலி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, நாகர்கோவில், கண்ணூர் ஆகிய ஊர்களிலிருந்து பெங்களூருக்கும், தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும், தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. திருநெல்வேலி, எர்ணாகுளம், மங்களூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து வட மாநில நகரங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

ரூ.2.96 கோடி வசூல் செய்த தீபாவளி சிறப்பு ரயில்கள்! - ஆர்டிஐ மூலம் தகவல்
ரூ.2.96 கோடி வசூல் செய்த தீபாவளி சிறப்பு ரயில்கள்! - ஆர்டிஐ மூலம் தகவல்

வருமானத்தைப் பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் சேர்த்து,

  • தாம்பரம் - திருநெல்வேலி ரூ.22.43 லட்சம்,
  • திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரூ.22.3 லட்சம்,
  • தாம்பரம் - நாகர்கோவில் ரூ.18.2 லட்சம்,
  • கொச்சுவேலி - தாம்பரம் ரூ.17.71 லட்சம்,
  • எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் ரூ.17.01 லட்சம்,
  • தாம்பரம் - திருநெல்வேலி ரூ.11.56 லட்சம்,
  • சென்னை - ராமேஸ்வரம் ரூ.11.29 லட்சம்,
  • திருச்சி - தாம்பரம் ரூ.2.62 லட்சம்
  • நாகர்கோவில் - பெங்களூரு ரூ.9 லட்சம், (ஒரு மார்க்கம்)
  • திருநெல்வேலி - தானாப்பூர் ரூ.53.8 லட்சம் ( இரு சேவைகள்)

என வருமானமாகக் கிடைத்துள்ளது. இது தவிர மற்ற மண்டலங்கள் மூலமாக இயக்கப்பட்ட ரயில்கள் மூலம் ரூ.1 கோடி வருமானமாகக் கிடைத்துள்ளது. அனைத்து ரயில்களையும் சேர்த்து மொத்த வருமானமாக ரூ.2.96 கோடி வசூலாகி உள்ளது.

ரயில் பயணிகளின் பயன்பாட்டை பொறுத்தவரையில், அதிகபட்சமாகத் திருநெல்வேலி - தானாபூர் ரயிலை 204 %-மும், குறைந்தபட்சமாகத் திருச்சி - தாம்பரம் ரயிலை 9.6 % பயணிகளும் பயன்படுத்தியுள்ளனர். திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான சிறப்பு ரயில்கள் 100 %-க்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி பயணிகளால் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில் திருநெல்வேலி வழியாக இயக்கப்பட்ட முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் 115 % இருக்கைகள் பயணிகளால் நிரம்பியது. சரியான நேரத்தில் இயக்கப்படாத ஒன்றிரண்டு சிறப்பு ரயில்களை தவிர அனைத்து சிறப்பு ரயில்களும் முழுமையாக நிரம்பியுள்ளது.

இதுகுறித்து நேற்று (டிச.10) பாண்டியராஜா தொலைப்பேசி வழியாகக் கூறுகையில், 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, பெங்களூர் மற்றும் பல்வேறு வடமாநில நகரங்களுக்கு ஒன்றிரண்டு நாட்கள் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு சுமார் ரூ.3 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. எனவே கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை மாதங்களாக விளங்கும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கினால் தெற்கு ரயில்வேக்கு பன்மடங்கு வருமானம் கிடைக்கும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் பல்வேறு ரயில் நிலையங்களில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களை கொண்டு இயக்கப்பட்டது. எனவே, ரயில்வேயின் வருமானத்தையும், பயணிகளின் தேவையையும் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும்' எனக் கூறினார்.

மேலும், வரும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கினால் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்; இதற்கு தெற்கு ரயில்வே செவி சாய்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அலுவலர்கள் தகவல்களைத்தரமாட்டார்கள்...ஆர்டிஐ சட்டம் மூலம் போராடித்தான் பெற வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.