ETV Bharat / state

தென்காசி வழித்தடத்தில் மதுரைக்கு ரயில்- தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 12:04 PM IST

Southern Railway
அம்பாசமுத்திரத்தில் இருந்து மதுரைக்கு ரயில் சேவை

Southern Railway: ரயில் பயணிகளின் கோரிக்கைக்கு இணங்க, ஈரோடு முதல் நெல்லை வரையிலான ரயில் சேவையை செங்கோட்டைக்கு நீட்டிப்பு செய்து ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மதுரை: திருநெல்வேலியில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு செல்லும் நெல்லை - ஈரோடு ரயிலை அம்பை, பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது ரயில்வே வாரியம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது நூற்றாண்டு பெருமை கொண்ட தென்காசி - நெல்லை ரயில் வழித்தடத்தில் மதுரைக்கு செல்ல ரயில்களே இல்லை என்ற பெரிய குறை இருந்து வந்தது. பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதி மக்களும் அதன் சுற்றுவட்டார மக்களும் பல்வேறு வேலை நிமித்தமாகவும், மதுரை உயர்நீதிமன்ற கிளை, மருத்துவமனைகள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள் போன்றவற்றிற்கு சென்று வருகின்றனர்.

தென்காசி - நெல்லை வழித்தடத்தில் நேரடியாக, மதுரைக்கு இதுவரை ஒரு ரயிலும் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகள் அதிக சிரமப்பட்டு பேருந்துகளில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இந்த நிலையில், நெல்லை - ஈரோடு ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிப்பு செய்வதால், காலையில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06673 திருச்செந்தூர் விரைவு ரயிலை மக்கள் எளிதாக பயன்படுத்த முடியும்.

மேலும் புதன்கிழமை தோறும் 22630 தாதர் விரைவு ரயிலுக்கும், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மும்பைக்கு இயக்கப்படும் வண்டி எண் 16352 பாலாஜி விரைவு ரயிலுக்கும் திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பைக்கு இயக்கப்படும் வண்டி எண் 16340 ரயிலுக்கும் இந்த ரயில் இணைப்பு ரயிலாக அமையும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 16845 ஈரோடு - திருநெல்வேலி ரயிலானது இரவு 8.30 மணிக்கு மேல் திருநெல்வேலி - தென்காசி வழித்தட பொதுமக்களுக்கு ஓர் இரவு நேர ரயிலாக இயங்க உள்ளது. நெல்லை - ஈரோடு ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிப்பதால் நெல்லை ரயில் நிலையத்தில் ஏற்படும் இடநெருக்கடி சற்று குறையும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் ரயில்வே வாரியம் அளித்துள்ள ஒப்புதலில், வண்டி எண் 16845 ஈரோடு - நெல்லை ரயில் ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு வந்து 9.45 மணிக்கு வந்து சேரும். அதனைத் தொடர்ந்து செங்கோட்டைக்கு இரவு 11.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16846 செங்கோட்டையிலிருந்து அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு, நெல்லையில் 6.45 மணிக்கு புறப்பட்டு, ஈரோடிற்கு மாலை 3 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், "ஈரோடு - நெல்லை ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த எம்பி, எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரயில்வே அதிகாரிகள் அனைவருக்கும் தென்மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாவூர்சத்திரம், கடையம், அம்பை சுற்றுவட்டாரப் பயணிகளுக்கு சாத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்கு எளிதாக இருக்கும். மேலும் மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு முதன்முறையாக நேரடி ரயில் இணைப்பு கிடைத்துள்ளது.

இதனால் கோவில்பட்டி, சாத்தூர் பகுதி மக்கள் பாபநாசம், குற்றாலம் சென்று வர நேரடி ரயில் சேவை கிடைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோட்டை - ஈரோடு ரயில் முழுவதும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கொண்டு இயங்குவதால் தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதன்முறையாக தருமபுரி வந்த வந்தே பாரத் ரயில்.. பொதுமக்கள் செல்பி எடுத்து உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.