'உதயநிதி காட்டிய செங்கலை வைத்து முதலமைச்சர் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா?' - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

author img

By

Published : Sep 14, 2022, 7:57 PM IST

Updated : Sep 14, 2022, 8:14 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்பி உதயகுமார்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்பி உதயகுமார் ()

உதயநிதி காட்டிய செங்கலை எடுத்து வந்து எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் பணிகளை செய்வாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை: தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு 58ஆம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 110 கிராம விவசாயிகள் பயனடையும் வகையில் தண்ணீர் திறக்கக்கோரி முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

ஆட்சியர் அனீஷ்சேகரும் கால்வாயில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ‘உசிலம்பட்டி 58ஆம் கால்வாய் திட்டம் எனும் 40ஆண்டுகள் கால கனவு திட்டத்தை நனவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி.

தற்போது 58ஆம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர். 58ஆம் கால்வாய் திட்டத்தில் அதிமுக அரசு மூன்று முறை தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இம்முறை வைகை அணை முழுமையாக நிரம்பியுள்ளதால் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மக்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால் 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நலனை புறக்கணிக்கிற அரசாக, விவசாயிகள் வேதனையைக் கவனத்தில் கொள்ளாத அரசாக திமுக அரசு உள்ளது. மதுரை வரும் முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகள் பிரச்னையை கவனத்தில் கொள்வார் என்ற நம்பிக்கையோடு இதைத் தெரிவிக்கிறோம்.

110 வருவாய் கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2500 ஏக்கர் விவசாய நிலம் பலன்பெறும் வகையிலும் 58ஆம் கால்வாய் திட்டத்திற்கு 140 நாள்களுக்கு 316 கன அடி நீர் திறக்க வேண்டும். முதலமைச்சர் செவி சாய்க்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தவே வந்தோம்.

மாவட்ட ஆட்சியர் கனிவோடு கோரிக்கையைப்பெற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். அதன் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்து மனுவினை தந்துள்ளோம். முல்லைப்பெரியாறு அணை உரிமையை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவிற்கு விவசாயிகள் விழா எடுத்த, அம்மா திடலை கலைஞர் அரங்கமாக மாற்றிவிட்டார்கள். ரூல் கர்வ் என்ற அடிப்படையில் கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீரை திறந்து கொள்கிறார்கள். சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகின்றனர்” என்றார்.

'உதயநிதி காட்டிய செங்கலை வைத்து முதலமைச்சர் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா?' - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

தொடர்ந்து பேசிய அவர், “விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில் விவசாயிகளுக்கு முதலமைச்சர் உரிய விளக்கம் அளிப்பாரா? தன் மெளன விரதத்தை கலைப்பாரா? உரிய விளக்கம் கொடுக்க முன் வருவாரா? மதுரை வரும் முதலமைச்சர் முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடுவாரா?

முதலமைச்சர் ஸ்டாலின், அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் சரியாக கிடைப்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் தட்டுப்பாடு நிலவுவது முதலமைச்சருக்கு தெரியுமா தெரியாதா எனத் தெரியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என செங்கலை எடுத்துக்காட்டி, வாக்கு சேகரித்தவர்கள் ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்கவில்லை.

உதயநிதி காட்டிய செங்கலை முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்து வந்தாவது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா? பணிகளை தொடங்குவாரா? என மதுரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கலைஞர் நூலகத்தை பத்துமுறைக்கு மேல் ஆய்வு செய்த முதலமைச்சர், அரசு மருத்துவமனைகளில் நோய் தீர்க்கும் மருத்துவத்திற்கான மாத்திரைகள் விஷயத்தில் ஆய்வு செய்வாரா?.

திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி கணவர் ஜெகதீசன், ஒரு டிவிட்டர் பதிவில் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். திமுக அரசிலே ஊழல் இல்லாத ஒரு துறையை காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என திமுகவின் முன்னாள் அமைச்சரின் கணவர் பதிவிட்டு இருப்பதே, இந்த அரசின் செயல்பாட்டுக்கு சாட்சியாக உள்ளது.

அரசு விழாவை கட்சி விழா போன்று நடத்தி, அரசு நிர்வாகத்தை அதற்குப் பயன்படுத்தி வருகின்றனர். மாநாடு, முப்பெரும் விழா என எத்தனை விழா நடத்தினாலும் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பாரா முதலமைச்சர்?. எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதிகள், அவர்கள் தொகுதிக்கான பணிகள் புறக்கணிக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சிறுவர்களை சமூகப்பொறுப்புள்ளவர்களாக மாற்ற சிற்பி திட்டம் பயன்படும்' - முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated :Sep 14, 2022, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.