ETV Bharat / state

’அரசியல் முதிர்ச்சியற்ற அரை இத்தாலியர் ராகுல்’ - ஹெச்.ராஜா தாக்கு

author img

By

Published : Aug 31, 2020, 4:42 PM IST

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

மதுரை: ராகுல் காந்தியை அரை இத்தாலியர், அரசியல் முதிர்ச்சியற்றவர் என பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜகவின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மதுரை வந்தார்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், “முன்னாள் நீதிபதி சந்துரு மத்திய நிதியமைச்சரை இழிவாக பேசியதை வாபஸ் பெறவேண்டும். அதிமுக கூட்டணியில் குழப்பம் விளைவிப்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜூவும், ஜெயக்குமாரும் எல்லை மீறி பேசுவதை நான் கண்டிக்கிறேன். அதை வைத்து சிலர் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகிறார்கள். தமிழ்நாடு அரசுக்கு எந்த விதத்திலாவது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் இருக்கிறார்கள்.

வெறும் 2 விழுக்காடு ஓட்டு வாங்கிய திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி 50 விழுக்காடு வாக்கைப் பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த அடிப்படையில் இனி இந்தியா எங்கும் பாஜகவின் ஆதரவின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் எனது கருத்து. பிரதமரை தலைவராகக் கொண்ட பாஜகவை இழிவு படுத்துவது, பிரதமரை இழிவு படுத்துவதற்கு சமம்.

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குச்சாவடி வாரியாக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் தான் நான் வருகை தந்துள்ளேன். மூன்று நாட்களில் நாள்தோறும் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் என ஆய்வு பணிகள் நடைபெறும்.

கரோனா காலத்தில் நாடு முழுவதும் 50 கோடி மக்களுக்கு, நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வீதம் மாதமொன்றுக்கு மாநில அரசுகளின் வழியாக 100 சதவீத மானியத்தின் மூலமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. அதே போன்று, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயன்களை பெற்ற பொதுமக்களை பாஜகவின் ஆதரவு வாக்காளர்களாக மாற்றுகின்ற பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மதுரை, திருச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நான் பொறுப்பு ஏற்றுள்ளேன்”என்றார்.

நீட், ஜேஇஇ தேர்வு குறித்த ராகுல் காந்தியின் கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ ராகுல் காந்தி போன்ற அரைவேக்காடுகள், அரை இத்தாலியர்களின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க விரும்பவில்லை” என்றார்.

இதையும் படிங்க:பாஜக இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது - ஹெச். ராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.