ETV Bharat / state

முன் அறிவிப்பு இன்றி மின் இணைப்பு துண்டிப்பு - வியாபாரிகள் குற்றச்சாட்டு

author img

By

Published : Nov 10, 2021, 1:01 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் எந்த முன் அறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டித்துவிட்டதாக புதுமண்டபம் வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

புதுமண்டபம் வியாபாரிகள் குற்றச்சாட்டு
புதுமண்டபம் வியாபாரிகள் குற்றச்சாட்டு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்புறம் அமைந்துள்ளது புது மண்டபம். இங்கு பல்வேறு கலை நயமிக்க வேலைப்பாடுகள் கொண்ட கல் தூண்களும் சிலைகளும் உள்ளன.

இம்மண்டபத்தின் சுற்றுப்புறத்தில் தையல் கலைஞர்கள் உள்பட பல்வேறு வகையான சுவாமி அலங்கார பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. கடந்த 2018ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம் மீனாட்சி கோயில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக புது மண்டபம் பகுதிகளில் கடை நடத்தும் வியாபாரிகள் மற்றும் தையல் கலைஞர்களுக்காக அருகிலுள்ள குன்னத்தூர் சத்திரம் மீண்டும் பொலிவோடு கட்டப்பட்டு அங்கு கடை வைக்க அறிவுறுத்தப்பட்டனர். தீபாவளி வரை அவர்களுக்கு கெடு விதித்திருந்த நிலையில், வியாபாரிகள் தங்களது கடைகளை புது மண்டபத்திலிருந்து காலி செய்யவில்லை.

இதன் காரணமாக கோயில் நிர்வாகம் புது மண்டபம் கடைகளுக்குச் செல்லும் மின்சாரத்தில் ஃபியூஸ் கட்டையை நீக்கியது. இதனால் புது மண்டபம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் தையல் கலைஞர்களும் தங்களது செல்பேசி வெளிச்சத்தின் மூலம் தொழிலை மேற்கொண்டனர்.

புதுமண்டபம் வியாபாரிகள் குற்றச்சாட்டு

இதுகுறித்து மதுரை புது மண்டப வியாபாரிகள் தையல் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் முத்துப்பாண்டி கூறுகையில், "பொது மன்றத்தில் 300 கடைகள் உள்ளன. கோயில் நிர்வாகம் விதித்த கெடு அடிப்படையில் தீபாவளிக்கு பிறகு நாங்கள் குன்னத்தூர் சத்திரம் செல்வதாக முடிவெடுத்து இருந்தோம். ஆனால் அங்கு மின் இணைப்பு இதுவரை கொடுக்கப்படவில்லை. மேலும் 30க்கும் மேற்பட்ட கடைகளுக்கு இன்னும் இடம் ஒதுக்கவில்லை.

எங்களிடம் உள்ள பொருள்களை தற்காலிகமாக வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாத நிலை. ஆகையால் குன்னத்தூர் சத்திரத்தில் மின் இணைப்பு கொடுக்கும் வரை இங்கு தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில், கோயில் நிர்வாகம் மின் இணைப்பை துண்டித்து விட்டது வேதனைக்குரியது" என்றார்.

இதையும் படிங்க: 'மத சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்' - மனித உரிமை ஆணையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.