Manipur violence: "மனித உரிமை அமைப்புகள் செயலிழந்து விட்டன" - கொந்தளித்த ஹென்றி டிபேன்!

author img

By

Published : Aug 1, 2023, 10:46 AM IST

Hendri Dhipagne

மணிப்பூர் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டன என மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் குற்றம் சாட்டியுள்ளார்.

Manipur violence: "மனித உரிமை அமைப்புகள் செயலிழந்து விட்டன" - கொந்தளித்த ஹென்றி டிபேன்!

மதுரை: மணிப்பூரில் உள்ள மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக இருவேறு சமூகத்தினரிடையே வன்முறை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நிகழ்ந்து வருகிறது. அந்த விவகாரத்தில் குக்கி என்ற மலை கிராம மக்களை தாக்குவது, தீயிட்டு எரிப்பது போன்ற வன்முறை அறங்கேறியது.

அது மட்டுமின்றி பெண்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி, அதை இணையத்தில் வெளியிட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்த சர்ச்சை தொடர்பாக, மோடி அரசு விளக்கமளிக்கக் கோரி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சி கூட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரங்களில் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாடு குறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தேசிய ஆணையங்கள் இருந்தும் பயனில்லை:

"மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்களில், குறிப்பாக குழந்தைகள், பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடி மக்கள் ஆகியோருக்கு எதிராக நடந்திருந்தாலும் அவை அனைத்துமே மனித உரிமை மீறல்கள்தான். இதுபோன்ற மீறல்கள் நடைபெறும் போது, அதற்கு குரல் கொடுப்பதற்காக, வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மாநில, தேசிய அளவிலான மனித உரிமை நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய சிறுபான்மை ஆணையம், தேசிய குழந்தைகள் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் தேசிய தகவல் ஆணையம் உள்ளிட்ட 9 தேசிய ஆணையங்கள் உள்ளன. இதேபோன்று 160-க்கும் மேற்பட்ட மாநில மனித உரிமை நிறுவனங்களும் உண்டு. உடனடியாக, சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதுதான் இந்த நிறுவனங்களின் பொறுப்பு".

மௌனம் கலைத்த தலைமை நீதிபதி:

"தேர்தல் ஆணையராகப் பொறுப்பிலிருந்த டி.என்.சேஷன், தேர்தல் ஆணையத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, நாங்கள் அரசுக்கான அமைப்பே தவிர, அரசுக்கு கீழ்ப்படிந்த அமைப்பு அல்ல என்பார். அதுபோன்று மேற்கண்ட ஆணையங்கள் அனைத்தும் அரசாங்கங்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அரசுக்கு அடிபணியக்கூடிய அமைப்புகள் கிடையாது என்பது மிக முக்கியமான விசயம்.

தேசிய மனித உரிமை ஆணையத்தில், கடந்த 2019-லிருந்து 6 முழு நேர உறுப்பினர்களும், மேலும் பெண்கள் ஆணையத்தின் தலைவர், எஸ்சி / எஸ்டி ஆணையங்களின் தலைவர்கள், குழந்தைகள் ஆணையத்தின் தலைவர், சிறுபன்மையினர் ஆணையத்தின் தலைவர் ஆகியோரும் இதில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

இது உலகத்தின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத முறையாகும். புகார்களை விசாரிக்கும் அதிகாரம் மட்டும்தான் இந்த வரையறுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குக் கிடையாது. மற்றபடி மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற பிற அதிகாரங்களைப் படைத்தவர்கள் ஆவர். ஆனாலும், மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.

கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தன்னுடைய மௌனத்தை உடைத்து, மணிப்பூரில் நடைபெறுகின்ற விசயங்களை, தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பேசினார். அதன் விளைவாக உச்சநீதிமன்றத்திற்கு வருமாறு இந்த நாட்டின் அட்டர்னி ஜெனரலை அழைத்தார். ஆனால் அதற்குப் பின்புதான் தேசிய மனித உரிமை ஆணையம் செயல்படவே தொடங்கியது என்பது வேதனைக்குரிய விசயம்".

தவறிழைக்கும் தேசிய குழந்தைகள் ஆணையம்:

"மணிப்பூர் விவகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா, பொதுச்செயலாளர், இணைச் செயலாளர் ஜெனீவா, நியூயார்க், பாங்காக் உள்ளிட்ட நகரங்களுக்கெல்லாம் சென்றார்கள். மணிப்பூர் சம்பவம் தொடர்பாக தன்னிச்சையான எந்த ஒரு நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவே இல்லை.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான தேசிய மனித உரிமைகள் ஆணையம், மணிப்பூர் விவகாரத்தில் செயல்படவே இல்லை என்பதை வெட்கத்துடன் இங்கே பதிவு செய்கிறேன். தேசிய பெண்கள் ஆணையம் அதைவிட மோசமாக செயல்பட்டது. தேசிய குழந்தைகள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவின் பார்வைக்கு மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதியே புகார் வந்துள்ளது.

அப்புகாரில் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் எந்தவித செயல்பாட்டிலும் அப்போது இறங்காமல், இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். மேலும், சிபிஐ(எம்) கட்சியின் பொலீட் பீரோ உறுப்பினர்கள் சுபாஷினி அலி, தருண் பாரதியா மற்றும் கமாலுதீன் ஆகியோர் மீது தேசிய குழந்தைகள் ஆணையம் வழக்குத் தொடர்ந்தது.

ஏனென்றால், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் குறித்த விவகாரத்தில் குழந்தைகளின் புகைப்படத்தை காட்டிவிட்டார்கள் என்று அந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிறுபான்மை, பட்டியல் சாதி மற்றும் பழங்குடி ஆணையங்களும் மணிப்பூர் விவகாரத்தைக் கண்டு கொள்ளவில்லை. இதனை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சர்வதேச அங்கீகாரம்:

"தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்பது உலக அளவிலான மனித உரிமைகள் அமைப்பிடம் அங்கீகாரம் பெற வேண்டிய அமைப்பாகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அங்கீகாரத்தைப் பெற வேண்டியது கட்டாயமாகும். ஏ (A) கிரேடு அங்கீகாரம் கிடைத்தால்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், உறுப்பினர்களும் ஐ.நா.சபையின் கூட்டத்தில் பங்கேற்கச் செல்ல முடியும்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் என்னுடைய தலையீட்டின் காரணமாக ஏ கிரேடு அங்கீகாரத்தைப் பெற்றார்கள். 2016-ஆம் ஆண்டு அங்கீகாரத்திற்காக மறுபடியும் செல்லும்போது, நீங்கள் சுதந்திரமாக செயல்படுகின்ற ஆணையம் கிடையாது. பல குறைகள் உண்டு. உங்களின் உறுப்பினர் தேர்வு என்பது வெளிப்படையாக நடைபெறுவது அல்ல.

வெறும் நீதிபதிகளை மட்டும் நியமனம் செய்துவிட்டு, மனித உரிமை குறித்த அனுபவம் இல்லாத நபர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கிறீர்கள் என்று குற்றம்சாட்டி அங்கீகாரத்தை நீட்டிக்க மறுத்து 2017-ஆம் ஆண்டுக்கு மாற்றி வைத்தார்கள். 2017-ஆம் ஆண்டு நமது ஆணையத்தின் 25-ஆவது ஆண்டாக இருக்கின்ற காரணத்தால் அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் எனத் தயங்கி, வெவ்வேறு விதமான அழுத்தங்களைக் கொடுத்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஆனாலும் அந்த ஆண்டும் குறைகள் சுட்டிக் காட்டப்பட்டன. 2023-ஆம் ஆண்டிற்கான அங்கீகாரத்திற்காகச் செல்லும்போது, அதுவும் மறுக்கப்பட்டுவிட்டது. தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்புதான் குளோபல் அலையன்ஸ் என்ற பன்னாட்டு மனித உரிமை அமைப்பு.

இவ்வமைப்பு இந்திய மனித உரிமை ஆணையத்தின் அங்கீகாரத்தை நீட்டிக்க மறுத்துவிட்டது. இதற்காகத்தான் தற்போது இவர்கள் உலகப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள். இந்த நிலையில்தான் அவர்களுக்கு மணிப்பூருக்குச் செல்ல நேரமில்லை".

இந்திய ஜனநாயகத்தின் சவால்:

"அரசியல்கட்சிகளைச் சார்ந்தோர் தற்போதுதான் அங்கே ஆய்வுக்காகச் சென்றிருக்கிறார்கள். ஆனால், மனித உரிமைத் தளத்தில் இயங்கக்கூடிய தேசிய ஆணையங்கள் அனைத்தும் இந்தியாவைப் பொறுத்தவரை முற்றிலும் செயல் இழந்து விட்டன. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப் பெரும் சவால் ஆக அமைந்து உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் அதே நேரம் ஒரு கட்சியின் நிர்வாகியாக பொறுப்பும் வகிக்கிறார். தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்து கொண்டே கட்சியிலும் எப்படி பொறுப்பு வகிக்க முடியும்?. கடந்த ஜூன் 12-ஆம் தேதி வந்த புகாருக்கு மகளிர் ஆணையம் எடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது?. இவர்தான் தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற பிற விசயங்களில் தலையீடு செய்கிறார்.

தேசிய ரீதியில் செயல்படுகின்ற இந்த ஆணையங்கள் ஜனநாயகத்திற்கு விரோதமாக இயங்குகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாக இயங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறேன். ஆகையால் இந்த ஆணையங்களில் இருப்போர் அத்தனை பேரும் பதவி விலக வேண்டும். நீதிபதி அருண் மிஸ்ரா தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீடிக்க அவருக்கு அருகதை இல்லை. தூத்துக்குடி சம்பவத்திலேயே அருண் மிஸ்ராவின் உண்மையான முகம் என்ன என்பதை வெளிக்காட்டிவிட்டார். அனைத்து ஆணையங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்" என வலியுறுத்துகிறேன்.

அருண் மிஸ்ரா பதவி விலக வேண்டும்:

"சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகள் கண்டிப்பாக தலையீடு செய்யும். ஐரோப்பா நாடாளுமன்றம் கடந்த ஜூலை 13 ஆம் தேதி இதற்கான தீர்மானத்தை இயற்றியுள்ளது. ஐ.நாவின் பொது அவையில் இப்பிரச்னை கண்டிப்பாகப் பேசப்படும் என உறுதியாகக் கூறுகிறேன். தேசிய மனித உரிமை ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே கேள்வி கேட்க முடியும்.

அங்கீகாரத்திற்காக இவர்கள் செல்லும்போது அதற்கான மாற்று அறிக்கையை நாங்கள் கொடுக்கிறோம். அதன் அடிப்படையில்தான் இவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதும் கிடைக்காததும். நீதிபதி அருண் மிஸ்ராவைப் பொறுத்தவரை பதவிதான் அவருக்கு முக்கியம். தன்னுடைய பணி நிமித்தம் சட்டத்தில் உள்ள பொறுப்புகளைக் கொண்டு செல்வதற்கு அவருக்கு அக்கறையில்லை என்பதையே இது காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Chennai Police Encounter: சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.