ETV Bharat / state

மதுரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பனங்கிழங்கினை அறுவடை செய்து அசத்திய பள்ளிக் குழந்தைகள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 4:05 PM IST

palmyra sprout
மதுரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பனங்கிழங்கினை அறுவடை செய்து அசத்திய பள்ளிக் குழந்தைகள்

Palmyra sprout: மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் எல்.கே.பி நகர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வளாகத்தில் 100 நாட்களுக்கு முன்பு மாணவர்களால் நடவு செய்யப்பட்ட பனை விதைகள் அனைத்தும் பனங்கிழங்குகளாக அறுவடை செய்தது குறித்து விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பில் காண்போம்..

மதுரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பனங்கிழங்கினை அறுவடை செய்து அசத்திய பள்ளிக் குழந்தைகள்..!

மதுரை: மதுரை மாவட்டம், எல்.கே.பி நகர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் மாணவர்களுக்குப் பள்ளிப் பருவத்திலேயே பசுமை எண்ணத்தையும், விவசாயச் சிந்தனையையும் வளர்த்தெடுக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மாணவ, மாணவியரைக் கொண்ட இளம் விவசாயிகள் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இவர்களது வேலை, பள்ளி வளாகத்தைப் பசுமையாகவும், தூய்மையாகவும் பராமரிப்பது, மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது, குறு வனங்களை உருவாக்குவது என ஆசிரியர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ஆகியோரது நினைவைப் போற்றி கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி சமூக ஆர்வலர் அசோக்குமார் வழிகாட்டுதலோடு பனைவிதைகள் நடவு செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து பராமரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொங்கல் விழாவினை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் நடவு செய்த பனங்கிழங்குகளை இன்று(ஜன.12) அறுவடை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறுவடை செய்த பனங்கிழங்குகளை ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கொடுத்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெற்ற அசோக்குமார் கூறுகையில்,“தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் குடுவைகளில் பனைவிதைகளை மாணவர்களைக் கொண்டு நடவு செய்தோம். குழந்தைகளுக்கு பனைமரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.

கடந்த செப்டம்பர் மாதம் விதைக்கப்பட்ட பனை விதைகள் அனைத்தையும் இளம் விவசாயிகள் குழுவினரே பராமரித்து வந்தனர். தற்போது நூறு நாட்களைக் கடந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது.

தமிழக அரசின் மாநில மரமான பனை, தற்போது அழிந்து கொண்டிருக்கிறது. இம்முயற்சி காரணமாக அதனை மீட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்களிடம் உருவாக்கியுள்ளது. பனங்கிழங்குகள் இதுபோன்ற முறையில்தான் நமது விவசாயிகளால் அறுவடை செய்யப்படுகிறது என காட்ட முடிந்துள்ளது. இதன் மூலம் வருங்கால தலைமுறையினர் பனை மரங்களைக் காக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார். இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தின் மிகச் சிறந்த பள்ளி என்ற விருதைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி சிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் தென்னவன் கூறுகையில், 'இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் இடைநிற்றலை தற்போது வெகுவாக குறைத்துள்ளோம். இதற்காக பல்வேறு முயற்சிகளை ஆசிரியர்களோடு இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.

வகுப்பைத் தாண்டிய இணை செயல்பாடுகள் காரணமாக, மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு நாள் தவறாமல் வரத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த இளம் விவசாயிகள் படை. இதன் மூலம் பள்ளி வளாகத்தின் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மரங்கள் அடர்ந்த சோலையாகப் பள்ளி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த செப்டம்பர் மாதம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. அதற்கான அறுவடைத் திருநாளைத்தான் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாங்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்தோம். அறுவடை செய்யப்பட்ட பனங்கிழங்குகளை மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பரிசாக வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்' என்றார்.

பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் ஹாசி ஹமீது மற்றும் 6-ஆம் வகுப்பு பயிலும் சாதனா ஆகியோர் கூறுகையில், நாங்களே நட்ட பனை விதைகளை 100 நாட்களுக்குப் பிறகு இன்று அறுவடை செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதனை எங்கள் ஆசிரியர்களுக்கே பரிசாக வழங்கினோம். எங்கள் பள்ளி பசுமை தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதில் எங்களது பங்கும் இருப்பது குறித்து தலைமையாசிரியருக்கும், சமூக ஆர்வலர் அசோக்குமாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றனர்.

இதையும் படிங்க: கடல் வளங்களை பாதுகாக்க ரூ.1,675 கோடி செலவில் நெய்தல் மீட்சி இயக்கம்.. வனத்துறையினர் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.