ETV Bharat / state

மதுரை விமான நிலையத்திற்கு அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை- மக்களவை உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Feb 26, 2021, 6:53 PM IST

மதுரை: அதிமுக அரசு மதுரை விமான நிலையத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

mdu
mdu

மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் சரியாக ஓராண்டிற்குப் பின்னர் இன்று (பிப்.26) மாலை மதுரை விமான நிலைய கூட்டரங்கில் ஆலோசனைக் குழுத் தலைவர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் துணைத் தலைவர் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் விமான நிலைய இயக்குநர் செந்திவளவன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டர் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட அலுவலர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மற்றும் பல்வேறு விமான நிறுவன மேலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கரோனா காலத்தில் பயணிகளை சிறப்பாக கையாண்டதற்காகவும், விமான நிலைய வளாகத்தினுள் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலையை 20 சதவீதம் குறைத்ததற்காகவும், பயணிகள் வசதிகளுக்காக மொபைல் ஏடிஎம், பிரிபெய்டு டாக்ஸி (ATM, Prepaid Taxi) வசதி, கூடுதல் நுழைவு வாயில்கள் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து, விமான நிலைய விரிவாக்கப் பணிகள் கடந்த ஓராண்டாக சுணங்கி இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் செய்தியாளர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறுகையில், மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது நிலத்தைக் கையகப்படுத்துவது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து இறுதி செய்வது.
இதைத்தான் ஒவ்வொரு கூட்டத்திலும் கண்காணித்து வருகிறோம்.
இறுதியாக ஒரு வருடம் முன்பாக நடந்த முந்தையக் கூட்டத்தில், இழப்பீட்டுத் தொகையாக நில உரிமையாளர்களுக்கு 54 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருந்தது.அதன் பின் இந்த ஓராண்டு காலத்தில் 40 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீட்டுத் தொகையாக கொடுக்கப் பட்டு இருக்கிறது. மொத்தம் 160 கோடி ரூபாய் இழப்பீடு தொகை நில உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

குற்றஞ்சாட்டு
மொத்த தொகையும் மாவட்ட நிர்வாகத்திடம் இருக்கிறது. அந்த இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு கொடுப்பதை விட மாநில அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் என்ன வேலை இருக்கிறது? முழு இழப்பீட்டுத் தொகையையும் இந் நேரத்திற்குள் கொடுத்து முடித்திருக்க வேண்டும். சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது, ஓடு பாதையை விரிவுப்படுத்துவது, விமான நிலைய எல்லைக்கு வெளியே உள்ள சுற்றுச் சாலையை விரிவுப்படுத்தும் போது வெளியே கொண்டு போவதா? அல்லது அண்டர் பாஸ் (under pass) சாலையாக கீழ்த்தள சாலையாக சுரங்கப் பாதையாக அமைப்பதா? என பல்வேறு விஷயங்களுக்குத் தீர்வு காண முடியும். அக்கறையின்மையோடு, எந்தவிதக் கவனமின்மையோடு மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் நடந்து இருக்கிறார்கள்.

வலியுறுத்தல்
இன்றைய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வரவில்லை. அடுத்த கூட்டத்திற்குள் முழுத் தொகையையும் நில உரிமையாளர்களுக்கு கொடுத்து விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டும் என இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுத்து, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி இருக்கிறோம்.
மொத்தம் 2199 உரிமையாளர்களில், ஆயிரம் உரிமையாளர்களுக்கு மட்டும் இழப்பீடு தொகையாக 94 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருகிறது. மீதி உள்ள 1199 உரிமையாளர்களுக்கு கிட்டத்தட்ட 67 கோடி ரூபாய் தொகையை விரைந்து மாவட்ட நிர்வாகம் கொடுத்து மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்தி தர வேண்டும்” என்றார்.

மாணிக்கம் தாகூர்
இந்தப் பேட்டியின் போது விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவருமான மாணிக் தாகூர் எம்.பி. உடனிருந்தார். அவர் கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசு மதுரை விமான நிலையத்திற்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. ஆனால், அமைச்சர் உதயகுமார் இரண்டு முறை போட்டோவுக்கு போஸ் கொடுத்து சென்றுள்ளார்” என்றார்.

இதையும் படிங்க: 24 மணி நேரமும் விமானங்களை இயக்கும் திட்டம் இல்லை - மதுரை விமான நிலையம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.