ETV Bharat / state

திருவள்ளுவரை பற்றிய அடிப்படை புரிதலே ஆளுநருக்கு இல்லை.. எம்.பி கனிமொழி பதிலடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 6:12 PM IST

dmk-mp-kanimozhi-pongal-celebration-with-folk-artist
திருவள்ளுவரைப் பற்றி அடிப்படை புரிதலே இல்லை; ஆளுநரின் பேச்சு குறித்து எம்.பி கனிமொழி பதில்..

DMK MP Kanimozhi: தமிழ், ஆங்கிலம் தாண்டி மற்ற மொழிகளைக் கற்பது அவரது விருப்பம், ஆனால், மும்மொழிக் கொள்கை என்பது அவசியம் என்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில், சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள கிராமியக் கலைஞர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, பொங்கல் விழா கொண்டாடி, அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் புத்தாடைகள் வழங்கினார்.

முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய கிராமியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறும்போது, "ஒவ்வொரு முறையும் சென்னை சங்கமம் நடக்கக்கூடிய இந்த சூழலிலே, கலைஞர்கள் சொந்த ஊரை விட்டுவிட்டு சென்னையில் நிகழ்ச்சிக்காக வந்து இருக்கக்கூடிய சூழலில், அவர்களோடு பொங்கல் திருநாளைக் கொண்டாடக்கூடிய ஒரு வாய்ப்பாக இந்த வாய்ப்பு அமைந்து இருக்கிறது.

சென்னை சங்கமம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதுணையோடு சென்னை சங்கமம் மறுபடியும் நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பகுதியிலிருந்து புதிய கலைஞர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது” என தெரிவித்தார்.

இந்தியைத் திணிக்கவில்லை என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதற்கு பதில் அளித்த கனிமொழி, "அரசுப் பள்ளிகளில் இந்தி மும்மொழிக் கொள்கைக்கான தேவை என்ன என்பதை முதலில் விளக்க வேண்டும். நம்முடைய பாரம்பரியம், அடையாளம் தாய்மொழி தமிழ். மற்ற மொழியினரோடு பேசுவதற்கு ஆங்கில மொழி இருக்கிறது. இதனால் ஆங்கிலம் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதனைத் தாண்டி, மற்ற மொழிகள் படிப்பது என்பது அவரவருடைய ஆர்வம். ஆனால், மும்மொழிக் கொள்கை என்பது அவசியம் என்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது" என கூறினார்.

திருவள்ளுவர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதிற்கு பதிலளித்த கனிமொழி, "திருவள்ளுவரைப் பற்றி அடிப்படை புரிதலே இல்லை என்ற வகையில் ஆளுநரின் பேச்சு உள்ளது. அவர் எந்த மதத்தையும் முன்மொழியவில்லை. அவர் மீது எந்த மதத்தையும் திணிக்க முடியாது என்பதை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும்" என பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: சமூகநீதியா? சனாதனமா? - ‘திருவள்ளுவர் தினம்’ வாழ்த்தில் கருத்து மோதல்.. டெல்லி என்ன சொல்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.