ETV Bharat / state

மதுரையில் 21 குண்டுகள் முழங்க எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உடல் தகனம்

author img

By

Published : Feb 26, 2022, 6:42 PM IST

எல்லை பாதுகாப்பு படை வீரர்
எல்லை பாதுகாப்பு படை வீரர்

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க தகனம்செய்யப்பட்டது.

மதுரை: பேரையூர் அருகே உள்ள பழையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கமலரங்கன் (38). இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஐந்து வயதில் ஆண் குழந்தையும், மூன்று வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

கமலரங்கன் 2004ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பணியில் சேர்ந்தார். அவர் திரிபுரா மாநிலம் அகர்தலாவிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள சி.கே. பாடி மலைப்பகுதியில் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 23) இரவு நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் கமலரங்கன் வீர மரணம் அடைந்தார். கமலரங்கன் பணி காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன. கமலரங்கன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த கமலரங்கன் உடல் சொந்த ஊரான பழையூருக்கு கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டுவரப்பட்டது. பெங்களூருவிலிருந்து எல்லைப் பாதுகாப்புப் படை வாகனத்தில் இன்று (பிப்ரவரி 26) காலை 9.30 மணிக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து பழையூர் மயானத்தில் கமலரங்கன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன், முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பேரையூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சரோஜா, சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிமொழி உள்பட காவல் அலுவலர்களும், ராணுவப் பயிற்சி பள்ளி மாணவர்களும், ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மதுரை ஆயுதப்படை காவலர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்த பின்னர் பழையூர் மயானத்தில் கமலரங்கன் உடல் தகனம்செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ஆவின் பால் வேனை திருடிச் சென்ற நபர் - மடக்கிப் பிடித்த போலீசார்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.