திருச்சி: திருச்சி அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு காலனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் காலனி என்ற பெயரை நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள F. கீழையூர் பஞ்சாயத்தின் கீழ் சுமார் 18 குக்கிராமங்கள் உள்ளன. பஞ்சாயத்து தலைவர் உயர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், நாங்கள் வசிக்கும் பகுதிக்கு F. கீழையூர் காலனி என்று பெயரிட்டு, வருவாய் மற்றும் பஞ்சாயத்து ஆவணங்களில் மாற்றி உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களில் F.கீழையூர் என்று இருந்தது. தற்போது, F.கீழையூர் காலனி என்று பெயர் மாற்றும் செய்துள்ளனர். மேலும் சாலை பெயர் பலகையிலும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் விஜய் ஆண்டனி இல்லத்தில் போலீசார் தீவிர விசாரணை!
இது போன்று பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியை காலனி என்று தனி ஒரு பகுதியாக பிரித்து, பெயர் சூட்டுவது சட்டத்திற்கு புறம்பானதாகும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, F. கீழையூர் காலனி என்று தற்போது மாற்றப்பட்டுள்ள எங்கள் பகுதி பெயரை, கிராமத்தின் பழைய பெயரான F. கீழையூர் என்று வருவாய், பஞ்சாயத்து மற்றும் அனைத்து ஆவணங்களில் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு இன்று (செப்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணைளை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கில் இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட்! சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மகிழ்ச்சி!