ETV Bharat / state

ம.கா.பல்கலைக்கழக நிதி சீர்கேட்டிற்கு அரசு அலுவலர்களும் முக்கியக்காரணம் - பேராசிரியர் சீனிவாசன்

author img

By

Published : Oct 27, 2022, 10:07 PM IST

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிதிச் சிக்கல்களுக்கு, அதன் சிண்டிகேட்டில் உறுப்பினர்களாக இருந்த அரசு அலுவலர்களும் முக்கியக் காரணம் என்று மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத்தலைவரும் பேராசிரியருமான முனைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

madurai kamaraj university  financial crisis  madurai kamaraj university financial crisis  Madurai Kamarasar University syndicate  financial problems  மதுரை காமராசர் பல்கலைக்கழகம்  சென்னைப் பல்கலைக்கழகம்  மதுரைப் பல்கலைக்கழகம்  தொகுப்பு நிதி  நிதி சிக்கல்  மதுரை செய்திகள்  மதுரை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை: தமிழ்நாட்டின் பாரம்பரியப் பெருமைக்குரிய கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கடந்த சில ஆண்டுகளாக நிதிப்பற்றாக்குறையில் சிக்கித்தவித்து வருகிறது. அதன் தீவிரம் கடந்த சில மாதங்களாக மிகக்கடுமையாக எதிரொலிக்கத்தொடங்கியிருக்கும் நிலையில், அங்கு ஒப்பந்தப் பணியாளர்களாக தற்காலிகமாகப் பணியாற்றிய ஊழியர்கள் 136 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அனைத்து மட்ட ஊழியர்கள், அலுவலர்கள், பேராசிரியர்களுக்கு சம்பளம் தருவதற்குக்கூட பணமில்லாததால், தமிழ்நாடு அரசின் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு ரூ.8 கோடி நிதியை வழங்கிய காரணத்தால், அக்டோபர் மாதச்சம்பளமே தீபாவளிக்கு ஒரு சில நாட்கள் முன்புதான் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலை வருகின்ற மாதங்களிலும் தொடர உள்ள நிலையில், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத்தின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் சீனிவாசன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம்தான் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதன்பிறகு 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுரைப் பல்கலைக்கழகம்தான் இரண்டாவது பெருமைக்குரியது. 1980-களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றம் கண்டது.

கடந்த 2010ஆம் ஆண்டு வரை காமராசர் பல்கலைக்கழகம் நிதி ஆளுகையில் தற்சார்புடன் இயங்கி வந்தது. தமிழ்நாட்டிலேயே தொலைதூரக் கல்வி இயக்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்தான் செயல்பட்டு வந்தது. 2010ஆம் ஆண்டிற்குப்பிறகு, தமிழ்நாட்டில் நிறைய பல்கலைக்கழகங்கள் உருவாகத்தொடங்கின. இதனால், தொலைதூரக்கல்வி இயக்கத்தின் வளர்ச்சி தடைபட்டது. இதனால் காமராசர் பல்கலைக்கழகத்தின் வருமானம் பெருமளவு குறையத்தொடங்கியது. இது முக்கியமான காரணம்.

அடுத்ததாக பல்கலைக்கழக நிதியைச்சரிவர கையாளாததால் நெருக்கடி ஏற்படத்தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் இங்கு பணியாற்றிய துணைவேந்தர்களின் அணுகுமுறையாலும் நிதி நிலை மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டது. தற்போது பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் பேராசிரியர்களுக்கு சம்பளம் தருவதற்கு இயலாத நிலை மட்டுமன்றி, ஓய்வூதியர்களுக்கும்கூட பணம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தச்சிக்கல் 2021 நவம்பர் மாதம் தொடங்கியது. அப்போதிருந்துதான் சம்பளம் சரிவர வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக எங்கள் தரப்பிலிருந்து உயர் கல்வித்துறை அமைச்சர், செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோன்று நிதியமைச்சர், நிதித்துறை செயலாளரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஒருகட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கும்கூட கொண்டு சென்றுள்ளோம். தமிழ்நாடு அரசு அளித்துள்ள உறுதிமொழியும்கூட தற்காலிக நிவாரணம் மட்டுமே.

நிரந்தரத் தீர்வுக்கான வழி எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. ஆனால், இனி வருகின்ற ஒவ்வொரு மாதங்களிலும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான உறுதியான நடைமுறையே இன்றைய தேவை. ஆனால், இதுவரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக தணிக்கை ஆட்சேபனைகளை சரிசெய்து கொண்டு வாருங்கள் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

ஆனால், இதுபோன்ற சிக்கல்கள் எழாமல் இருப்பதற்காகவே பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் (சிண்டிகேட்டில்), உயர் கல்வித்துறை செயலாளர் உட்பட அரசு சார்ந்து ஏழு, எட்டு பேர் வரை உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் அந்தந்த காலகட்டத்தில் இதுபோன்ற சீர்கேடுகளை முறையாகக் கண்காணித்திருந்தால் தற்போது இந்த சிக்கலே ஏற்பட்டிருக்காது. தற்போதைய பல்கலைக்கழக நிதிச்சீர்கேடுகளுக்கு இந்த தமிழ்நாடு அரசு அலுவலர்களும் முக்கியக்காரணம் என குற்றம்சாட்டுகிறேன்.

பல்கலைக்கழகத்தில் பல்வேறு சிக்கல்கள் முறைகேடுகள் இருந்தன என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. இதை சரி செய்ய வேண்டிய கடமை பல்கலைக்கழக நிர்வாகத்திடம்தான் உள்ளது என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அதே நேரத்தில் ஆட்சிமன்றக் குழுவில் இருந்த அரசு அலுவலர்களும் தங்களது கடமையைச் செய்திருக்க வேண்டுமல்லவா..?

இதனை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஏறக்குறைய 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் தற்போது பாதிக்கப்பட வேண்டிய காரணம் என்ன..? ஆகையால் இதனை தலையாய பிரச்னையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு தீர்க்க வேண்டியது தமிழ்நாடு அரசுதான்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப் போன்று, காமராசர் பல்கலைக்கழகத்தின் முழுப்பொறுப்பை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஓய்வுபெற்றவர்களுக்கு எவ்வாறு அரசு ஓய்வூதியம் தருகிறதோ அதே போன்று காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர்களுக்கு அரசே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் சீனிவாசன் பேட்டி

பேராசியர் வ.சுப.மாணிக்கனார் கடந்த 1979-82 வரை இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிபோது, ஓய்வூதியத்திற்காகவே மிகப்பெரிய அளவில் தொகுப்பு நிதி (கார்பஸ்) ஒன்றை உருவாக்கினார். அது சற்றேறக்குறைய ரூ.320 கோடி அளவில் இருக்கும் என நினைக்கிறேன்.

அதே நிதி கடந்த 2013ஆம் ஆண்டு வரை ரூ.230 கோடி வரை இருந்தது. இதனைப் பயன்படுத்தக்கூடாது என்ற நிலையிலும் இதிலிருந்து பணம் எடுக்கத்தொடங்கினார்கள். அதுமட்டுமன்றி சிபிஎஸ் என்றழைக்கப்படுகின்ற பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட நிதியையும் தற்போது காலி செய்துவிட்டார்கள். இதன் காரணமாக பல்கலைக்கழகம் தற்போது மிகப்பெரிய சிக்கலில் மாட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யும்போது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பல்கலைக்கழக வருமானத்தின் மூலமாக நிதி மேலாண்மை செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு மிக கடினமாகும்.

பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழ்நாடு அரசே எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத்தையாவது அரசு கருவூலம் மூலமாக வழங்க முன் வர வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமாக பல்கலைக்கழகத்தை ஓரளவிற்கேனும் மீட்க முடியும். இந்தத் தீர்வுகளின்றி வேறு வழியே இல்லை" என்றார்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்- பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.