ETV Bharat / state

சித்திரை திருவிழா 7ஆம் நாள் - மழை காரணமாக சுவாமியின் வீதியுலா ரத்து

author img

By

Published : Apr 11, 2022, 10:34 PM IST

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (ஏப்.11) அம்மனும் சுவாமியும் அதிகார நந்தி மற்றும் யாளி வாகனத்தில் மாசி வீதிகளில் வலம் வருவதாக இருந்த நிலையில் மழை காரணமாக வீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா
சித்திரை திருவிழா

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா களைகட்டி வரும் நிலையில், ஏழாம் நாளான இன்று (ஏப்.11) அம்மனும் சுவாமியும் அதிகார நந்தி மற்றும் யாளி வாகனத்தில் மதுரையின் நான்கு மாசி வீதிகளில் வலம் வருவதாக இருந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் வெப்பச்சலனம் காரணமாக மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

மழை இரவு வரை நீடித்த காரணத்தால் மாசி வீதியில் இன்று வலம் வருவதாக இருந்த சுவாமி அம்மன் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாது கூடியிருந்த பக்தர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அவர்கள் தரிசிக்க வசதியாக கோயிலுக்குள் அம்மனும் சுவாமியும் அதிகார நந்தி மற்றும் யாளி வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் வண்ணம் கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

7ஆம் நாள் திருவிழாவின் தத்துவமும் பலனும்

ஏழாம் நாள் திருவிழா எழுவகைப் பிறப்பு, கலையாதிகள் ஏழு, மாபாகுணம் ஏழு என்னும் இவற்றைத் தவிர்த்தற் பொருட்டாகும். ஏழாம் நாள் காலையில் பிட்சாடனத் திருக்கோலத் திருவிழா நடைபெறும். தாருகாவனத்து ரிஷிகளும், ரிஷிபத்தினிகளும் ஆவண மலத்தால் நாங்கள் சுதந்திரர்களென எண்ணிக் கடவுளை மறந்தனர். அவர்கள் பரதந்திரர்களென் உணர்த்துதற் பொருட்டு இறைவன் பிட்சாடன மூர்த்தியாய்ப் செல்ல ரிஷிபத்தினிகள் அவரது அழகில் மயங்கினர்.

விஷ்ணு மோகினியாகச் செல்ல அவ்வழகில் ரிஷிகள் மயங்கினர். இவ்விரண்டு செயல்களாலும் ரிஷிகளும், அவர் பத்தினிமார்களும் பரதந்திரர்களேயென அவர்களை‌ உணரச் செய்து பரமன் மறைந்தருளினான். பராக்ரமக் கோலமே பிட்சாடனக் கோலமாகும். ஏழாம் நாள் இரவில் அதிகாரநந்தி வாகனம். இது விருத்திக்கிரம சங்காரக் கோலம் என்பர். அதிகார நந்தி - மான், மழு, சதுர்ப்புஜம், முக்கண் முதலிய குறிகளோடு சாரூப்பிய பதவியைப் பெற்றவர். இவர் விஞ்ஞான கலர் எனும் ஆன்மாக்களுள் சிறந்தவர் ஆவர். கைலாசத்தில் சிவசந்நிதானத்தில் அதிகாரம் செலுத்துபவர். ஆதலால் அதிகாரநந்தி எனப் பெயர் பெற்றார்.

மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா
மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 7ஆம் நாள் திருக்கோலம்

விளையும் கருக் குழி வீழாமல், என் தன் வினைப் பிறவி
களையும் படிக்கும் கருது கண்டாய் - கழுநீரை வென்று
வளையும் தரள மணித்தோடு அழுத்திய வள்ளையைச் சென்று
அளையும் கயல் விழியாய்! மதுராபுரி அம்பிகையே! - மதுராபுரி அம்பிகை மாலை, குலசேகர பாண்டியன்.

இதையும் படிங்க: முருகனுக்கே விபூதியா? திருச்செந்தூர் கோயிலில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.