ETV Bharat / state

ஹெல்மெட், முகக்கவசம் இன்றி பைக் ரைடு; சர்ச்சையில் சிக்கிய சு.வெங்கடேசன்!

author img

By

Published : Jan 27, 2022, 2:43 PM IST

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் இன்றி குடியரசுநாள் விழாவின்போது மேற்கொண்ட இருசக்கர வாகனப் பயணம் தற்போது சர்சையைக் கிளப்பியுள்ளது.

மதுரை: மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்பாளராகவும் உள்ள சு.வெங்கடேசன் நாட்டின் 73ஆவது குடியரசு நாளை முன்னிட்டு, நேற்று மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள வ.உ.சி.யின் திருவுருவச் சிலைக்கு தன்னுடைய கட்சி பிரதிநிதிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பிறகு அங்கிருந்து யானைக்கல், வெற்றிலைப்பேட்டை, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாகத் தெப்பக்குளம் சென்று மருதுபாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினார். தன்னுடைய கட்சிப் பிரதிநிதிகளோடு இருசக்கர வாகனத்தைத் தானே ஓட்டியவாறு பயணம் மேற்கொண்டார். அவரோடு நான்கிற்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சித் தொண்டர்களும் உடன் வந்தனர்.

இந்தப் பயணத்தின் போது சு.வெங்கடேசன் தலைக்கவசம் மட்டுமன்றி, முகக்கவசமும் அணியாமல் சென்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்குத் தவறான முன்மாதிரி!

மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர், சாதாரண பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். ஆனால், அவரே சாலை மற்றும் கரோனா விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டது மிகத் தவறான முன்னுதாரணமாகும் என அதிருப்தி கிளம்பியுள்ளது.

இதற்கிடையில் சு.வெங்கடேசன் மீது காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதுபோன்ற பயணத்தைச் சாதாரண பொதுமக்கள் மேற்கொண்டிருந்தால் காவல்துறை அபராதம் விதித்துக் கண்டித்திருக்கும் நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்க்கு மட்டும் சலுகை அளித்துள்ளதா எனவும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க:தமிழனாக இருந்தும் தமிழ்த்தாயை மதிக்க மறுப்பவர்களை என்ன செய்வது ? - ராமதாஸ் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.