ETV Bharat / state

இந்தித் திணிப்பை ஆதரித்த ஆடிட்டர் சங்கத் தலைவர்: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்

author img

By

Published : Oct 25, 2021, 6:51 PM IST

ஆடிட்டர் சங்கத் தலைவருக்கு சு வெங்கடேசன் கண்டனம்
ஆடிட்டர் சங்கத் தலைவருக்கு சு வெங்கடேசன் கண்டனம்

இந்தி எங்களுக்கு தாய்மொழி அல்ல என்றும், எனவே அரசியல் சாசனத்துக்கு எதிரான கருத்தை திரும்பப் பெறுங்கள்” என இந்தியத் தணிக்கையாளர் கழகத் தலைவர் ஜம்பு சாரியாவுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை: எம்பி சு.வெங்கடேசன் இன்று (அக்.25) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

”இந்தியத் தணிக்கையாளர் கழகத் தலைவர் ஜம்பு சாரியா "தாய் மொழியான இந்தியின் ஆற்றலை உணர்ந்து அதை இந்தியத் தணிக்கையாளர் கழகம் தனது பணிக் கலாச்சாரத்தில் இணைத்து மேம்படுத்த வேண்டும்" என்று அக்கழகத்தின் "தி சார்டர்ட் அக்கவுன்டன்ட்" இதழில் எழுதியுள்ளார்.

அக்கழகத்தின் இணையதளத்திலும் இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். ஜம்பு சாரியா அவர்களே... உங்கள் கூற்று அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியாவில் 19,500 மொழிகள் உள்ளன. 32 மொழிகள் 10 லட்சம் நபர்களுக்கு மேலானவர்களின் சொந்த மொழியாகவும், மேலும் 28 மொழிகள் ஒரு லட்சம் நபர்களுக்கு மேலானவர்களின் சொந்த மொழியாகவும் உள்ளது.

இந்தி குறித்து ஆடிட்டர் சங்கத் தலைவர் ஜம்புசாரியா
இந்தி குறித்து ஆடிட்டர் சங்கத் தலைவர் ஜம்புசாரியா

தாய் மொழி அல்ல

இந்தி எல்லாருக்கும் தாய் மொழி அல்ல. உங்கள் கழகத்தில் உள்ள எல்லா தணிக்கையாளர்களுக்குமான தாய் மொழியும் அல்ல. உங்கள் கழகத்தின் சேவையைப் பயன்படுத்துகிறவர்கள் எல்லாருக்குமானதும் அல்ல. ஆகவே உங்கள் கூற்று உண்மையும் அல்ல.

ஆடிட்டர் சங்கத் தலைவருக்கு சு வெங்கடேசன் கண்டனம்
ஆடிட்டர் சங்கத் தலைவருக்கு சு வெங்கடேசன் கண்டனம்

இது இந்திய நாட்டின் மொழிப் பன்மைத்துவத்துக்கும் எதிரானது. மேலும் உங்கள் நிறுவனம் நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்ட நெறிகளை கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு அதற்கு உள்ளது. பிராந்திய மொழிகள் என்ற தலைப்பிலான பிரிவுகள் 345, 346ஐப் படித்துப் பாருங்கள். இந்தி பேசாத மாநிலங்கள் மீது அதைத் திணிக்க முடியாது.

ஆடிட்டர் சங்கத் தலைவருக்கு சு வெங்கடேசன் கண்டனம்
ஆடிட்டர் சங்கத் தலைவருக்கு சு வெங்கடேசன் கண்டனம்

'மாநில மொழுகளின் பயன்பாட்டை உறுதி செய்க’

மாநில சட்ட மன்றங்கள் ஆங்கிலம் தொடர வேண்டும் என்று சொல்கிற வரை, ஒன்றிய அரசுத் துறைகள், அதன் தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்த முடியாது. இந்திய அரசியல் சாசனம் 8ஆவது அட்டவணை 22 மொழிகளை அங்கீகரித்து இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஆகவே உங்கள் கழகமும் சட்டத்திற்கு உள்பட்டு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.

ஆடிட்டர் சங்கத் தலைவருக்கு சு வெங்கடேசன் கண்டனம்
ஆடிட்டர் சங்கத் தலைவருக்கு சு வெங்கடேசன் கண்டனம்

சட்டத்துக்கு விரோதமான அணுகுமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே இந்தியை சொந்த மொழியாகக் கொண்டவர்கள் 39 விழுக்காடு நபர்களே. இந்தி உங்களின் தாய் மொழியாக இருக்கலாம். அதன் மீது உங்களுக்கு அளவற்ற பற்று இருக்கலாம். எனது தாய் மொழி தமிழ். எனக்கு என் தாய் மொழியின் மீது உள்ள பற்று உங்களை விட அதிகமானது.

தமிழ்நாடு என்றும் திணிப்பை அனுமதிக்காது

எனக்கு மட்டுமல்ல உங்களின் தணிக்கை முடிவுகளை நம்பி பயன்படுத்துகிற ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவரவர் தாய் மொழி மீது அளவற்ற பற்று உண்டு. உங்கள் கூற்று இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகும். ஆகவே உங்கள் ’தாய் மொழி’ கருத்து திரும்பப் பெறப்பட வேண்டும்.

அரசியல் சாசன நெறிகளுக்கு உள்பட்டு உங்கள் கழகத்தின் மொழிப் பயன்பாடு அமைய வேண்டும். தமிழ்நாடு என்றும் இந்தித் திணிப்பை அனுமதிக்காது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின - நடிகர் விஜய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.