ETV Bharat / state

மதுரை மல்லிக்கு வந்த சோதனை: வரத்து அதிகரிப்பால் மலிவு விற்பனையில் உச்சம்!

author img

By

Published : Jun 23, 2023, 5:16 PM IST

வரத்து அதிகரிப்பால் மலிவு விற்பனையின் உச்சத்தில் மதுரை மல்லி
வரத்து அதிகரிப்பால் மலிவு விற்பனையின் உச்சத்தில் மதுரை மல்லி

மதுரை மல்லிகைப் பூவின் வரத்து அதிகரிப்பால் விலை மந்தமடைந்துள்ளது என்றும் சுப முகூர்த்த நாட்களினால் இன்னும் ஓரிரு நாட்களில் மதுரை மல்லிகைப்பூ விலை அதிகரிக்கக்கூடும் என வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரத்து அதிகரிப்பால் மலிவு விற்பனையின் உச்சத்தில் மதுரை மல்லி

மதுரை: தமிழ்நாட்டில் பல இடங்களில் மல்லிகைப்பூ வியாபாரம் கலைகட்டினாலும் மதுரை மண் மனம் மாறாத மல்லிகைக்கு இன்றளவிலும் உலகளவு சந்தையில் அதிக மவுசு தான். மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் பல்வேறு வகையான பூக்கள் அனைத்தும் இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும் மதுரைக்கு அருகே உள்ள பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் மல்லிகை உட்பட மற்ற பூக்களும் இங்கு விற்பனைக்கு வருகிறது.

மேலும் மதுரையிலிருந்து மல்லிகை பூக்கள் பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரை மலர் சந்தையில் மட்டும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 டன் பூக்கள் விற்பனையாகின்றன. மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் உண்டு. காரணம் மதுரையின் மலரின் தடித்த காம்பு நல்ல மணம் போன்ற சிறப்பு தன்மைகள் கொண்டவையே.

மதுரை மலர் சந்தையில் இன்றைய மலர் விலை நிலவரத்தை பொருத்த வரையில், கிலோ ஒன்றுக்கு மல்லிகை ரூ.300, பூச்சி ரூ.300, முல்லை ரூ.200, சம்பங்கி ரூ.50, செவ்வந்தி ரூ.200, சென்டு மல்லி ரூ.60, பட்டன் ரோஸ் ரூ.150 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிற பூக்களின் விலைகளும் கணிசமாக குறைந்து உள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “அதிகமான மலர்களின் வரத்து காரணமாக மல்லிகை பூ குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களில் முகூர்த்த நாட்கள் தொடங்குவதால் அப்போது விலை அதிகரிக்கக்கூடும். தற்போது வரத்து அதிகரிக்கும் காரணமாக நறுமண ஆலைகளுக்காக மதுரை மல்லிகை அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது” என்றார்.

இந்நிலையில் மதுரை மல்லிகையின் விலை குறைவு காரணமாக பொதுமக்கள் அதிகமாக வாங்கத் தொடங்கியுள்ளனர். அதனை அடுத்து சில்லறை பூ விற்பனையாளர்களும் அதிக அளவு மல்லிகை பூக்கள் விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். தற்போதைய பூக்கள் விலை நிலவரம் அடுத்த ஓரிரு நாட்களுக்கு தொடரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மல்லிகை உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஓரளவிற்கு கட்டுபடியாகக்கூடிய விலைதான் என்றாலும் தொடர் மழை மற்றும் பராமரிப்பின் போது உயரக்கூடிய விலையால் எங்களுக்கு எந்த பயனும் இருப்பதில்லை. நுகர்கின்ற மக்களுக்கு அவர்கள் வாங்கக்கூடிய விலையில் பூக்கள் கிடைக்கும் பட்சத்தில் மிக சிறப்பாக இருக்கும்” என்கின்றனர்.

இதையும் படிங்க: ‘கோயில்களில் தனிநபருக்கு முதல் மரியாதை கிடையாது’ - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.