ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு.. ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..

author img

By

Published : Jul 6, 2023, 11:04 PM IST

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடியில் 55 வயது நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி. இவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த 55 வயதுடையவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், அந்நபரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். தற்போது அந்த நபர் உயிருடன் இல்லை. இதனால் அவர் மீதான போக்சோ வழக்கு முடிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது மகளின் கர்ப்பத்தை கலைக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும், தனக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக் கோரி சிறுமியின் தாயார் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் மகளின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கவும், இடைக்கால நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மனுதாரரின் மகளின் கரு கலைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி பி.டி.ஆஷா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ''மனுதாரர் 'ஆடு போல் உடையணிந்த ஓநாயால்' சீரழிக்கப்பட்டு, கர்ப்பமாக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆவார். தந்தை வயதில் உள்ளவரால் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு உரிய இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் சேர்த்து மறுவாழ்வு அளிப்பது குறித்து யோசிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மனுதாரர் சம்மதிக்கவில்லை. மகளை தன்னுடன் வைத்துக்கொள்வதாக தெரிவித்துவிட்டார்.

இந்த வழக்கில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரின் பதில் மனுவில் மனிதாபிமான அணுகுமுறை இல்லை. சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இலவசம் மற்றும் உரிய நீதி வழங்குவது மற்றும் பொருளாதாரம் மற்றும் பிற காரணங்களுக்காக நீதி மறுக்கப்படாமல் இருப்பது மற்றும் நீதிக்கான வாய்ப்புகளை உறுதி செய்வதும் சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உண்மையான நோக்கம்.

இந்த நோக்கம் பதில் மனுவில் இல்லை. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அளிக்க நினைக்கும் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்கு பதிலாக இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரியுள்ளார். இந்த வழக்கில் சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய நபர் சட்டப்படியான தண்டனை எதுவும் அனுபவிக்காமல் இறந்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது.

வழக்கு முடிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போக்சோ வழக்குகளின் கீழ் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீடு நிதியிலிருந்து சிறுமி ரூ.14 லட்சம் இழப்பீடு பெற தகுதியானவர். எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு 4 வாரத்தில் ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இப்பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். வங்கி வழங்கும் வட்டித் தொகையை மாதம்தோறும் மனுதாரர் எடுத்துக்கொள்ளலாம்.

இப்பணத்தை சிறுமியின் மறுவாழ்வுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தவறினால் மாவட்ட குழுந்தை நல அலுவலர் நீதிமன்றத்தை அணுகி உத்தரவில் மாற்றும் கோரலாம். மாவட்ட குழந்தை நல அலுவலர் 3 மாதத்துக்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் பார்வையிட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்'' என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம் : பள்ளி முன் பெண் சுட்டுக் கொலை! தொடரும் துயரச் சம்பவங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.