ராஜீவ் காந்தி கொலை வழக்கு; அகதிகள் முகாமில் இருந்து விடுவிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; அகதிகள் முகாமில் இருந்து விடுவிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
Madurai Bench: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் இருந்து, ராபர்ட் பயஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 32 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற பின்பு, கடந்த 2022, நவம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். தற்போது திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு இலங்கை சிறப்பு அகதிகள் முகாமில் 2022, நவம்பர் 12 முதல் காவலில் வைத்து உள்ளனர்.
முகாமிலிருந்துருந்து விடுதலை செய்யுமாறு இலங்கை அகதிகள் முகாம் அதிகாரியிடம் கேட்டபோது, தங்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினர். ஆனால், தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மரண தண்டனைக்கு அனுப்புவது போன்றாகும். அங்கு சென்றால் நான் நிச்சயமாக கொல்லப்படுவேன். எனவே, தான் இலங்கை செல்ல விரும்பவில்லை.
தற்போது எனது மகனுக்கு திருமணமாகி, நெதர்லாந்தில் மனைவி மற்றும் மகன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நான் கைது செய்யப்பட்டதில் இருந்து, நான் என் மகனுடன் வாழ்ந்ததில்லை. தற்போது என் மனைவியும் நான் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகிறாள். தன்னை அனுமதித்தால், நெதர்லாந்தில் என் மகன், மனைவி மற்றும் சகோதரியுடன் தன் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ விரும்புகிறேன்.
எனவே, திருச்சியில் உள்ள இலங்கை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதால், நெதர்லாந்து செல்வதற்கு தொடர்புடைய அதிகாரிகளின் முன் ஆஜராக முடியவில்லை. எனவே, என்னை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும். சுமார் 1 வருடம் சுதந்திரமாக இருக்க அனுமதித்து, நான் நெதர்லாந்து அல்லது வேறு நாட்டிற்குச் செல்ல தொடர்புடைய அதிகாரிகளைச் சந்திக்கவும், வெளிநாடு செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.
இதேபோன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஜெயக்குமாரும், தன்னை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து, சென்னையில் உள்ள தனது குடும்பத்தினருடன் வாழ அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ராபர்ட் பயஸ் தொடர்ந்த வழக்கில், தனது குடும்பம் வெளிநாட்டில் உள்ளதால், வழக்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை, எதிர்மனுதரராக சேர்த்து வழக்கு குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
