700 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லும் வழக்கு; தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை!

700 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லும் வழக்கு; தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை!
Madras High Court Madurai Branch: தினமும் 700 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: கன்னியாகுமரியைச் சேர்ந்த பினோய், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் 'தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு கிராவல், ஜல்லி கற்கள், எம்.சாண்ட், குவாரி தூசி மற்றும் மணல் சப்ளை செய்யும் ஒப்பந்தம் பெற்றுள்ளோம்.
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்கிறோம். 10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தனர்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, '10 சக்கரத்திற்கு மேற்பட்ட 700 லாரிகளில் தினமும் கனிமங்கள் கொண்டு செல்லலாம்’ என அனுமதித்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து அரசுத் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.
அப்போது அரசுத் தரப்பில், 'தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் கனிமங்கள் கொண்டு செல்வதால்ம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி சாலைகளும் பாதிக்கிறது. பொதுநலன் கருதியே அரசு இந்த முடிவெடுத்தது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தினமும் 700 லாரிகளில் களிமங்கள் கொண்டு செல்லலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், தனி நீதிபதியிடம் நிலுவையில் உள்ள பிரதான வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென்றும், இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.
