ETV Bharat / state

முன்விரோத கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 11:25 AM IST

.உயர்நீதிமன்ற மதுரை கிளை
முன்விரோத கொலை வழக்கு

Madras High court Madurai Bench: முன்விரோத கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யாமல் விட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யாமல், குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் விடுவித்தது தொடர்பாக, வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில், விசாரணை அதிகாரியின் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவர் மீது கடுமையான நடவடிக்கைகளை உரிய முறையில் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மைதிலி தாக்கல் செய்த மனுவில், "திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனது கணவர் சிவக்குமார். இவர், முன்விரோதம் காரணமாக, கடந்த நவம்பர் 28, 2021 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், காவல்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் கொலை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்வோம் என்று உறுதியளித்தனர். இதனால், எனது எனது கணவரின் உடலைப் பெற்று அடக்கம் செய்தோம். அதனைத்தொடர்ந்து, சோமரசம்பேட்டை காவல் துறையினர், கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட (ஏ3,ஏ4) ஆகிய இரண்டு பேர் விடுவிக்கப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், விசாரணை அதிகாரி ஒருதலைப் பட்சமாக செயல்பட்டுள்ளார். உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிகை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்திகுமார், சுகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது, விசாரணையில், மனுதாரர் தரப்பில், ”இந்த வழக்கில், 4 குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குற்றப்பத்திரிகையில் இல்லை. இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்படவில்லை. திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி உதயகுமார் விசாரணையை நியாயமாக நடத்தவில்லை. எனவே, தாக்கல் செய்த இறுதி அறிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

அதனைத்தொடர்ந்து, அரசு தரப்பில், “புலன் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை அதிகாரி, சாட்சிகளின் வாக்குமூலத்தின்படி, ஏ - 3 மற்றும் ஏ - 4 தொடர்பு பற்றி சாட்சிகள் யாரும் பேசவில்லை. எனவே, சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், A - 3 மற்றும் A யின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், இறுதி அறிக்கையில் அவர்கள் பெயரை சேர்க்கவில்லை” என கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “புலனாய்வு அதிகாரி உதயகுமார் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக இறந்தவரின் மனைவி குற்றம் சாட்டியும், அவர் குற்றவாளியை உடனடியாக கைது செய்யவில்லை. எனவே, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார் மீது துறை ரீதியான விசாரணைக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரல் உத்தரவிட வேண்டும். விசாரணை அதிகாரியின் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவர் மீது கடுமையான நடவடிக்கைகளை உரிய முறையில் எடுக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் காணொளியில் பங்கேற்ற நிகழ்ச்சி.. கலந்துகொள்ளாத அதிகாரிகள் காலியாக இருந்த சேர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.