ETV Bharat / state

'2026இல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும்...' கடிதம் வாயிலாகப் பதிலளித்த மத்திய அமைச்சர்!

author img

By

Published : May 5, 2022, 3:26 PM IST

2026ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும்... மக்களவையில் மத்திய அரசு அதிரடி!!
2026ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும்... மக்களவையில் மத்திய அரசு அதிரடி!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மதுரை: எய்ம்ஸ் பணிகள் 2026 அக்டோபர் மாதத்தில் முடிவுறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் அறிக்கைவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து நான் நாடாளுமன்றத்தில் விதி எண் 377இன் கீழ் எழுப்பி இருந்தேன்.

ஒன்றிய அரசின் சுகாதாரம் & குடும்ப நல அமைச்சக செயலாளருக்கு 20.01.2022அன்று கடிதமும் எழுதி இருந்தேன்.
தற்போது ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் குமாரிடமிருந்தும், ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலச்செயலாளர் ராஜேஷ் பூசனிடமிருந்தும் கடிதங்கள் வந்துள்ளன.

அவ்விரண்டு கடிதங்களில் தரப்பட்டுள்ள பதில்கள் இவை: டிசம்பர் 2018இல் ரூ.1264 கோடி மதிப்பீட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்திற்கான ஒப்புதல் தரப்பட்டது. ஜெய்கா (ஜப்பான் சர்வதேச நிறுவன முகமை) கடனுக்கான ஆயத்த ஆய்வுப் பணிக் குழுவினர் பிப்ரவரி 2020இல் மதுரைக்கு வந்தனர்.150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய்ப்பிரிவு ஒன்றை தொடங்குவது என்ற புதிய முடிவின் காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.1264 கோடியில் இருந்து ரூ.1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது.

ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 26.03.2021அன்று கையெழுத்தானது. மொத்த நிதித் தேவையான ரூ.1977.80 கோடிகளில் ஜெய்கா கடன் ரூ.1627.7 கோடிகளாக இருக்கும். மீதம் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும். அக்டோபர் 2026க்குள்ளாக எய்ம்ஸ் பணிகள் முடிக்கப்படுமென்றும் ஒப்பந்தம் தெரிவிக்கிறது. வளாகச் சுற்றுச் சுவர் உள்ளிட்ட முன் முதலீட்டுப் பணிகளில் 92 விழுக்காட்டுப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

திட்டப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் (நிர்வாகம்), கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திட்ட மேலாண்மை ஆலோசகரை முடிவு செய்வதற்கான உலகளாவிய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிலேயே தற்காலிக வளாகம், தமிழ்நாடு அரசின் ஆலோசனையின் அடிப்படையில், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு "எய்ம்ஸ்" எம்பிபிஎஸ் படிப்பு தொடங்கப்படும்.கூடுதல் செலவு மதிப்பீடுக்கான நிர்வாக ஒப்புதல் நடைமுறை முடிவடைகிற தருவாயில் உள்ளது.

எய்ம்ஸ் என்பது மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கனவு. இதன் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். நிர்வாக ரீதியான முடிவுகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் மதுரை எய்ம்ஸ் பற்றி ஏதாவது ஒருவகையில் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறோம். பணிகள் மேலும் தாமதமாகாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:எட்டாக்கனியாகும் எய்ம்ஸ் மருத்துவமனை;2023ஆம் ஆண்டுதான் பணிகள் தொடங்கும் எனத் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.